இளம்பெண் கற்பழிப்பு இந்தி பட அதிபர் மொரானி கைது


இளம்பெண் கற்பழிப்பு இந்தி பட அதிபர் மொரானி கைது
x
தினத்தந்தி 23 Sep 2017 10:30 PM GMT (Updated: 23 Sep 2017 8:08 PM GMT)

நடிகர் ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட இந்திப்படங்களை தயாரித்தவர் கரீம் மொரானி.

ஐதராபாத்,

நடிகர் ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட இந்திப்படங்களை தயாரித்தவர் கரீம் மொரானி. இவர் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை சொல்லி 25 வயது பெண்ணை ஏமாற்றி கற்பழித்ததாகவும், அவரை நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பெண், ஐதராபாத் ஹயத்நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மொரானி மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 417 (மோசடி), 376 (கற்பழிப்பு), 342 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்), 506 (குற்ற மிரட்டல்) உள்ளிட்டவற்றின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அவருக்கு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டு முதலில் முன்ஜாமீன் வழங்கியது. ஆனால் இவர் ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர் என்ற உண்மையை மறைத்து விட்டதாக கூறி, பின்னர் அந்த முன்ஜாமீனை ரத்து செய்தது. அதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை ஐதராபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு ஹயத்நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் முறைப்படி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Next Story