3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு


3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 24 Sep 2017 7:56 AM GMT (Updated: 24 Sep 2017 7:56 AM GMT)

இந்தியாவிற்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.



இந்தூர்,


ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் முறையே இந்திய அணி 26 ரன், 50 ரன் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒரு நாள் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டு ‘ஹாட்ரிக்’ சாதனையுடன் தொடரை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கும் முன்னேற முடியும். முதல் இரு ஆட்டங்களில் ரோகித் சர்மா, மனிஷ் பாண்டே ஆகியோரின் பேட்டிங் சரியில்லை. 

அவர்களும் பார்முக்கு திரும்பினால் அணி இன்னும் வலுப்பெறும். பேட்டிங்கை விட பந்து வீச்சு தான் இந்தியாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது. 

உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணிக்கு இது வாழ்வா-சாவா? ஆட்டமாகும். இதில் தோற்றால் தொடரையும் பறிகொடுக்க வேண்டி இருக்கும் என்பதால் முழுமூச்சுடன் வரிந்து கட்டுவார்கள். முந்தைய ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் தவறான ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை தாரைவார்த்த ஆஸ்திரேலிய வீரர்கள் அத்தகைய பேட்டிங் சொதப்பலுக்கு பரிகாரம் தேட முயற்சிப்பார்கள். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து உள்ளது. இந்திய அணி முதலில் பீல்டிங் செய்கிறது.

Next Story