புதிய மாநிலங்களை அமைப்பது குறித்து வெள்ளை அறிக்கை அளிக்க கோரிக்கை


புதிய மாநிலங்களை அமைப்பது குறித்து வெள்ளை அறிக்கை அளிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 24 Sep 2017 2:15 PM GMT (Updated: 2017-09-24T19:45:37+05:30)

இந்தியாவில் புதிய மாநிலங்களை அமைப்பது குறித்து வெள்ளை அறிக்கை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

குவஹாத்தி

இந்த விஷயம் தொடர்பாக மக்களிடையே பொது விவாதங்கள் நடத்தி தேசிய கொள்கை ஒன்றை ஏற்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது. புதிய மாநிலங்கள் அமைப்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதிய மாநிலங்களின் ஆதரவாளர்கள் கோரியுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடையே பேசும்போது புதிய மாநிலங்களுக்கான தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஹரி ஆன்னே வரும் அக்டோபர் 14 மற்றும் 15 தேதிகளில் நாக்பூரில் அமைப்பின் மாநாடு விவாதிக்கும் என்றார்.

மராட்டியத்திலிருந்து விதர்பா, அஸாமிலிருந்து போடோலாந்து, மேற்கு வங்கத்திலிருந்து கூர்க்காலாந்து மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்து பண்ட்லேகான் ஆகிய புதிய மாநிலங்கள் அமைக்க கோரிக்கை பல்லாண்டுகளாகவே விடப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து எந்தவொரு பெரிய அரசியல் கட்சிக்கும் தெளிவான நிலைப்பாடு கிடையாது என்று ஆன்னே குற்றஞ்சாட்டினார். இப்போதைய ஆளும் கட்சியான பாஜக 2014 ஆம் ஆண்டிற்கு முன்பு மூன்று புதிய மாநிலங்களை உருவாக்கியிருந்தாலும், இப்போது இது குறித்து எதையும் தெரிவிக்கவில்லை என்றார் ஆன்னே. 

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் தலைமை வழக்கறிஞரான ஆன்னே மைய அரசு இது குறித்து நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி மசோதா கொண்டு வந்து தோற்றுப்போனாலும் நாங்கள் ஒப்புக்கொள்வோம்; ஆனால் இது குறித்து அரசு செயல்படுவதாக நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறான கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டால் வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது என்ற ஆன்னே இதுவரையில் இதற்கான போராட்டங்கள் அமைதியாகவே நடக்கின்றன என்றார். 

அரசு வன்முறை ஏற்பட்டால் முழுபலம் கொண்டு அடக்கி விடலாம் என்று நினைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். எமது நோக்கத்தை நிறைவேற்ற சிறந்த தந்திரங்களையுடைய போராட்டங்களை நடத்த வேண்டும் என்றார் ஆன்னே.

போடோலாந்து பகுதியில் வன்முறை வெடிக்குமா?

புதிய மாநிலம் அமைக்கும் முடிவை மத்திய அரசு எடுக்காவிட்டால் போடோலாந்து பகுதியில் வன்முறை ஏற்படும் சூழல் ஏற்படலாம் அனைத்து போடோ மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பிரமோத் போரோ தெரிவித்தார். நாங்கள் மக்கள் தரும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் உள்ளோம் என்றார் அவர்.

பாஜக அரசு தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறிவிட்டது என்றார் அவர். அரசு தாமதிக்காமல் நீண்ட கால தீர்வைக்காண சூழலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாறாக அது தாமதிக்கும் தந்திரங்களையே மேற்கொண்டு வருகிறது என்றார் பிரமோத்.


Next Story