ஏழைகள் பயன் அடைய ‘கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்துங்கள்’


ஏழைகள் பயன் அடைய ‘கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்துங்கள்’
x
தினத்தந்தி 25 Sep 2017 12:00 AM GMT (Updated: 2017-09-25T01:19:08+05:30)

ஏழைகள் பயன் அடைவதற்காக கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தும்படி பிரதமர் மோடி வானொலி உரையில் வேண்டுகோள் விடுத்தார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்றும் வானொலியில் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) தலைப்பில் நாட்டு மக்களிடையே கலந்துரையாடி வருகிறார். நேற்றும் அவர் வானொலியில் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மோடி தனது எண்ணங்களைத்தான் வெளிப்படுத்துகிறார் என்று எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுக்கு அவர் மறைமுகமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:–

இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களின் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்கிறேன். சில நேரங்களில் குற்றச்சாட்டுகளும் வருகின்றன.

மனதின் குரல் நிகழ்ச்சியை என் மனதின் குரல் என்று எப்போதும் நான் கூறியது கிடையாது. இந்த நிகழ்ச்சி, நாட்டு மக்களோடு இணைந்தது. அவர்களின் உணர்வுகளோடும், அபிலாசைகளோடும் கலந்தது. மனதின் குரலில் மிகக் குறைவான அளவில்தான் எனது கருத்துகளையும், எண்ணங்களையும் கூறுகிறேன்.

இளைய சமுதாயத்தினரிடம் இப்போதெல்லாம் கதர் ஆடைகள் மீதான ஈர்ப்பு அதிகரித்து இருப்பதை காண முடிகிறது. இதன் காரணமாக கதராடை விற்பனையும், ஏழைகளுக்கு வேலைவாய்ப்பும் அதிகரித்து இருக்கிறது.

கதர் ஆடைகளை நாம் வாங்கும்போது ஏழைகளின் இல்லங்களில் தீபாவளி தீபங்கள் ஒளிவிடும் என்ற உணர்வை நாம் மனதில் தாங்கி செயல்படவேண்டும். இந்த செயல்பாட்டால் தேசத்தில் ஏழைகளுக்கு சக்தி பிறக்கிறது. எனவே கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story