15 உயிர்களை பாதுகாத்த வீரருக்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசில் பதவி உயர்வு


15 உயிர்களை பாதுகாத்த வீரருக்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசில் பதவி உயர்வு
x
தினத்தந்தி 25 Sep 2017 7:33 AM GMT (Updated: 25 Sep 2017 7:33 AM GMT)

காஷ்மீரில் தீவிரவாதியின் கையெறி குண்டு வீச்சில் இருந்து 15 பேரின் உயிரை காப்பாற்றிய சிறப்பு போலீஸ் படை வீரருக்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசில் பணியாற்ற பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் வடக்கே பாராமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படை வாகனம் ஒன்றின் மீது நேற்று கையெறி குண்டை வீசினான். அந்த வாகனத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 15 பேர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இருந்தனர்.

எனினும் அதில் இருந்த சிறப்பு போலீஸ் படை வீரர் அகுயூப் தனது உயிரை கவனத்தில் கொள்ளாது உடனடியாக கையெறி குண்டை எடுத்து வாகனத்திற்கு வெளியே வீசினார்.

இந்த சம்பவத்தில் அகுயூப் உள்ளிட்ட 2 சிறப்பு போலீஸ் படை வீரர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் மற்றும் பொதுமக்களில் 4 பேர் சிறிய அளவில் காயமடைந்தனர்.

சிறப்பு போலீஸ் படை அதிகாரியின் இந்த தைரிய செயலை மூத்த அதிகாரிகள் மற்றும் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பாராட்டினர்.

உமர் அப்துல்லா தனது டுவிட்டர் செய்தியில், தைரியமுடன் செயல்பட்ட இந்த வீரரை கவுரவிக்கும் வகையில் உடனடியாக அவரை ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசில் பணியாற்ற வழிசெய்ய வேண்டும் என டி.ஜி.பி. எஸ்.பி. வைத்திடம் கேட்டு கொண்டார்.

அவருக்கு பதிலளிக்கும் வகையில், வைத் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விலைமதிப்பில்லா பல உயிர்களை பாதுகாத்த இந்த சிறப்பு போலீஸ் படை வீரரின் பதவி உயர்வுக்காக நான் உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதற்கு அப்துல்லாவும், உங்களுக்கு எனது நன்றிகள். சிறப்பு போலீஸ் படை வீரர்கள் நல்ல விசயங்களை மேற்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் இது அமையும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Next Story