ரோஹிங்யாக்களை வெளியேற்றாதீர்கள் வருண்காந்தி; தேச பாதுகாப்பிற்கு எதிரானது மோடியின் மந்திரி விமர்சனம்


ரோஹிங்யாக்களை வெளியேற்றாதீர்கள் வருண்காந்தி; தேச பாதுகாப்பிற்கு எதிரானது மோடியின் மந்திரி விமர்சனம்
x
தினத்தந்தி 26 Sep 2017 10:50 AM GMT (Updated: 2017-09-26T16:20:07+05:30)

ரோஹிங்யாக்களை வெளியேற்றாதீர்கள் என்ற பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. வருண் காந்தியின் கருத்திற்கு எதிர்ப்பு எழுந்து உள்ளது.


புதுடெல்லி,

மியான்மரில் ராகினேவில் அசாதாரண சூழ்நிலையில் நிலவி வரும் நிலையில் இந்தியாவில் உள்ள 40 ஆயிரம் ரோஹிங்யா அகதிகளை வெளியேற்ற மத்திய அரசு செய்துவரும் முயற்சிகள் பல்வேறு தரப்பில் எதிர்ப்பை சந்திக்கிறது. 

ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவதற்கு எதிராக சுப்ரீம் கோட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, இது கொள்கை சார்ந்தது, ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடையது என்ற உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி அவர்களை வெளியேற்றுவதில் தன்னுடைய ஸ்திரமான நிலையை வெளிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. நவபாரத் டைம்ஸ் இந்தி பத்திரிக்கையில் எழுதி உள்ள கட்டுரையில் மத்திய அரசு ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றும் நகர்விற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார். சர்வதேச ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதை தவிர்த்து, அகதிகளுக்கு உதவி செய்வது என்பது இந்தியாவின் மிகப்பெரிய பாரம்பரியமாகும் என குறிப்பிட்டு உள்ளார். இந்த கட்டுரையை தன்னுடைய டுவிட்டரிலில் பகிர்ந்தும் உள்ளார். இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தேச பாதுகாப்பை காரணமாக மத்திய அரசு அவர்களை வெறியேற்ற நகர்ந்து வரும் நிலையில் பாரதீய ஜனதாவின் எம்.பி. வருண்காந்தியின் கருத்தானது சர்ச்சையாகி உள்ளது. இதனால் கோபம் அடைந்து உள்ள உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகிர், “இந்தியாவின் பாதுகாப்பை யாரெல்லாம் கருத்தில் கொண்டு இருக்கிறார்களோ, அவர்கள் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டார்கள்,” என குறிப்பிட்டு உள்ளார். மேலும், இந்தியாவிற்குள் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் ஊடுருவலை தடுக்க மத்திய அரசு முழு படையும் பயன்படுத்தி வருகிறது எனவும் குறிப்பிட்டு உள்ளார் ஹன்ஸ்ராஜ். 

விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் வருண் காந்தி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், என்னுடைய கட்டுரையானது இந்தியாவின் அகதிகள் கொள்கை வரையறை அடிப்படையாக கொண்டது, இந்தியா அகதிகளை எப்படி ஏற்றுக்கொள்வது என்பது பற்றிய தெளிவான வரையறையை அது கொண்டு உள்ளது. ரோஹிங்யாக்கள் விவகாரத்தில் அனுதாபம் மற்றும் சாத்தியமானவகையில் தஞ்சம் அளிக்கவே அழைப்பு விடுத்து இருந்தேன், தேசிய பாதுகாப்பிற்கு கவலையை ஏற்படுத்தாத வண்ணம் அடைக்கலம் கோரும் ஒவ்வொரு விண்ணப்பத்தாரர் தொடர்பாகவும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என விளக்கம் தெரிவித்து உள்ளார். 

Next Story