அவசர அவசரமாக அமல்படுத்திய ஜிஎஸ்டி வரியால் 30 லட்சம் பேர் வேலை இழப்பு ராகுல் குற்றச்சாட்டு


அவசர அவசரமாக அமல்படுத்திய ஜிஎஸ்டி வரியால் 30 லட்சம் பேர் வேலை இழப்பு ராகுல் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Oct 2017 3:21 AM GMT (Updated: 8 Oct 2017 3:21 AM GMT)

அவசர அவசரமாக அமல்படுத்திய சரக்கு, சேவை வரியால் 30 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.


மாண்டி, 

வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறும் இமாசலபிரதேச மாநிலத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தேர்தல் பிரசாரம் தொடங்கி விட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அங்கு மாண்டியில் உள்ள பாத்தல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் காங்கிரஸ் கட்சியின் முதல்–மந்திரி வேட்பாளராக வீரபத்ர சிங்கை அறிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வீரபத்ர சிங், 6 முறை முதல்–மந்திரி பதவி வகித்து விட்டார். 7-வது முறையாகவும் அவர் முதல்–மந்திரி ஆவார். ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் அவர் பின்னால் நிற்கிறது.

2 கோடிப்பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறி விட்டது. ஒவ்வொரு 24 மணி நேரத்திலும், 30 ஆயிரம் பேர் புதிதாக வேலை தேடுகின்றனர். அவர்களில் தினமும் 450 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. நமது போட்டியாளரான சீனாவில் தினமும் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது. அவசர அவசரமாக சரக்கு, சேவை வரியை அமல்படுத்தியதால் 30 லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, இந்த வரி முறை, வியாபாரிகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையால் உள்நாட்டு மொத்த உற்பத்தி சரிவு அடைந்துள்ளது. சாமானிய மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சி ஆளுகிற மாநிலங்களில்தான் விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்கின்றனர். 

பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த கருப்பு பணத்தையும் திரும்பக்கொண்டு வந்து விடுவோம், ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று மோடி, நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். ஆனால் மக்களுக்கு ஒரு பைசா கூட வழங்காமல், முட்டாள் ஆக்கப்பட்டு விட்டனர். மோடி அரசின் பொருளாதார கொள்கைகள், மக்களின் நம்பிக்கையை வஞ்சித்து விட்டன. கடந்த 42 மாத ஆட்சியில், எந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார் என்பதை மோடி, நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story