நாளை நடைபெறுவதாக இருந்த பெட்ரோல் ‘பங்க்’குகள் வேலைநிறுத்தம் ரத்து


நாளை நடைபெறுவதாக இருந்த பெட்ரோல் ‘பங்க்’குகள் வேலைநிறுத்தம் ரத்து
x
தினத்தந்தி 11 Oct 2017 9:45 PM GMT (Updated: 11 Oct 2017 5:42 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த பெட்ரோல் ‘பங்க்’குகளின் வேலைநிறுத்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் கமி‌ஷன் தொகையை 6 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்க வேண்டும், இந்த எரிபொருளை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும், ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் (‘பங்க்’குகள்) அறிவித்து இருந்தனர்.

இந்த கோரிக்கைகள் மட்டுமின்றி, குறைந்த விற்பனைக்கு கடுமையான அபராதம் விதிக்கும் புதிய சந்தை ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை எதிர்த்தும் நடத்தப்படும் இந்த வேலைநிறுத்தம் மூலம் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 27–ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எண்ணெய் நிறுவனங்கள், வேலைநிறுத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தின. தவறும்பட்சத்தில் டீலர்ஷிப் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை வடுத்தன.

இதைத்தொடர்ந்து இந்த வேலைநிறுத்தத்தை ரத்து செய்வதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் அறிவித்து உள்ளனர். இது குறித்து அனைத்து இந்திய பெட்ரோலியம் டீலர்கள் சங்க தலைவர் அஜய் பன்சால் கூறுகையில், ‘வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என 3 எண்ணெய் நிறுவனங்களின் இயக்குனர்கள் எங்களை கேட்டுக்கொண்டனர். அதை ஏற்று இந்த போராட்டத்தை நாங்கள் ரத்து செய்துள்ளோம்’ என்றார்.


Next Story