குழந்தைகள்தான் புதிய இந்தியாவின் தலைவர்கள் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை


குழந்தைகள்தான் புதிய இந்தியாவின் தலைவர்கள்  ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 29 Oct 2017 6:58 AM GMT (Updated: 2017-10-29T12:28:03+05:30)

குழந்தைகள்தான் புதிய இந்தியாவின் தலைவர்கள் எனவும், குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை பெரியவர்கள் ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் நிலவும் பிரச்சினைகள், அரசின் முடிவுகள், மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் என பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் எடுத்துறைப்பதற்காக தொடங்கப்பட்ட ரேடியோ நிகழ்ச்சி ‘மன் கி பாத்’. மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ரேடியோவில், ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இம்மாதம்  கடைசி ஞாயிற்றுக் கிழமையுமான இன்று காலை 11 மணிக்கு மோடி உரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடியது மறக்க முடியாத அனுபவம்.  இந்திய ராணுவ வீரர்கள், நமது எல்லைகளின் பாதுகாப்புக்கு மட்டும் போராடாமல், உலக அமைதிக்காகவும் போராடி வருகின்றனர். நம் வீரர்களின் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். ஐ.நா அமைதி பணியில் 18 ஆயிரம் வீரர்களின் பங்களிப்பு உள்ளது. 

தற்போது 7 ஆயிரம் வீரர்கள் இந்த பணியில் உள்ளனர். ஐ.நா. அமைதி படையில் அதிக அளவில் ராணுவ வீரர்கள் உள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. அமைதி நடவடிக்கையில் பெண்களின் பங்களிப்பும் உள்ளது. அமைதி நடவடிக்கையில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் 85 நாட்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது.

இந்தியா எப்போதும் உலகத்திற்கு அமைதி, சகோதரத்துவம், ஒற்றுமையை  நல்கி வருகிறது.  தீபாவளி பண்டிகை காலத்தில் டெல்லியில் உள்ள காதி கிராம்யோக் கடையில் ரூ.1 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது என குறிப்பிட்டார்.

மேலும்  குழந்தைகள்தான் புதிய இந்தியாவின் தலைவர்கள் என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.   குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை பெரியவர்கள் ஊக்குவிக்க வேண்டும்.  புதிய இந்தியாவிற்கு யோகா மிக அவசியம்; நோயில்லா வாழ்வை இளைஞர்கள் பெற யோகா உதவும். சர்தார் ஷாகிப் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்படும். இந்த விழாவில் பங்கேற்க உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Next Story