குஜராத்தில் புதிதாக பிறந்த 9 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு; விசாரணைக்கு அரசு உத்தரவு


குஜராத்தில் புதிதாக பிறந்த 9 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு; விசாரணைக்கு அரசு உத்தரவு
x
தினத்தந்தி 29 Oct 2017 11:50 AM GMT (Updated: 29 Oct 2017 11:50 AM GMT)

குஜராத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பிறந்த 9 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது பற்றி மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அகமதாபாத்,

குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட 9 குழந்தைகள் திடீரென பலியாகியுள்ளன.

குஜராத்தின் லுனாவாடா, சுரேந்திராநகர், மன்சா, விராம்கம், ஹிம்மத்நகர் ஆகிய தொலைதூர பகுதிகளில் பிறந்த 5 குழந்தைகள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறந்துள்ளன. அவற்றிற்கு உயிருக்கு அச்சுறுத்தலான வியாதிகள் இருந்துள்ளன. மிக சிக்கலான நிலையிலேயே மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளன என அரசு அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்நிலையில், அந்த மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளும் சிக்கலான நிலையில் பிறந்தபின் இறந்துள்ளன.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களில் 18 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் உயிரிழந்துள்ளன என மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதல் அமைச்சர் விஜய் ரூபானி, நிலைமையை பற்றி ஆய்வு செய்வதற்காக மூத்த சுகாதார அதிகாரிகளுடன் காந்திநகரில் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த உயிரிழப்புகளுக்கான காரணங்கள் பற்றி விசாரணை மேற்கொள்ள மருத்துவ கல்வி துணை இயக்குநர் ஆர்.கே. தீட்சித் தலைமையில் குழு உருவாக்கப்பட்டு உள்ளது.

அகமதாபாத் நகர மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 5 முதல் 6 குழந்தைகள் உயிரிழக்கின்றன என்றும் அரசு அறிக்கை தெரிவிக்கின்றது.


Next Story