காஷ்மீர் சுயாட்சி விவகாரம்: ‘எனது கருத்துகளை பிரதமர் முழுமையாக படிக்கவில்லை’ ப.சிதம்பரம் தகவல்


காஷ்மீர் சுயாட்சி விவகாரம்: ‘எனது கருத்துகளை பிரதமர் முழுமையாக படிக்கவில்லை’ ப.சிதம்பரம் தகவல்
x
தினத்தந்தி 29 Oct 2017 9:00 PM GMT (Updated: 2017-10-30T01:32:48+05:30)

காஷ்மீர் குறித்து நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்

புதுடெல்லி,

காஷ்மீர் குறித்து நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், காஷ்மீர் மக்கள் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை அப்படியே அமல்படுத்த வேண்டும் என விரும்புவதாகவும், தங்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வேண்டும் என கோருவதாகவும் கூறியிருந்தார்.எனவே இது குறித்து ஆய்வு செய்து, எந்தந்த பகுதிகளில் சுயாட்சி வழங்குவது என தீவிரமாக பரிசீலிக்கலாம் என தான் விரும்புவதாக கூறிய ப.சிதம்பரம், காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தொடர்ந்து இருக்க வேண்டும் எனவும், சுயாட்சி என்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.

ப.சிதம்பரத்தின் இந்த கருத்துகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது, நமது வீரர்களை அவமதிக்கும் செயல் எனக்கூறிய பிரதமர் மோடி, நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையில் சமரசத்துக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து ப.சிதம்பரம் நேற்று கூறுகையில், ‘காஷ்மீர் குறித்து என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த பதிலை பிரதமர் முழுமையாக படிக்கவில்லை என்று வெளிப்படையாக தெரிகிறது. நான் அளித்த பதில் முழுவதும் ஒரு வார்த்தையும் மாறாமல் முன்னணி நாளிதழில் வெளியாகி இருக்கிறது’ என்றார்.

தன்னை விமர்சிப்பவர்கள் அனைவரும் தனது முழுப்பதிலையும் நிச்சயம் படிக்க வேண்டும் என்றும், பின்னர் அதில் எந்த வார்த்தை தவறு என்று தன்னிடம் கூறுமாறும் வலியுறுத்திய ப.சிதம்பரம், பிரதமர் ஒரு பேயை கற்பனை செய்து கொண்டு தாக்கி வருவதாகவும் கூறினார். 

Next Story