விமானம் கடத்தப்படும் கழிவறையில் கிடந்த கடிதத்தால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்


விமானம் கடத்தப்படும் கழிவறையில் கிடந்த கடிதத்தால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
x
தினத்தந்தி 30 Oct 2017 8:33 AM GMT (Updated: 30 Oct 2017 8:32 AM GMT)

விமான கழிவறையில் விமானம் கடத்தப்படும் என கிடந்த கடிதத்தால் அவசரமாக ஆமதாபத்தில் தரையிறக்கப்பட்டது.

ஆமதாபாத்,

மும்பையில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று புறப் பட்டு சென்றது. அந்த விமானத்தில் 115 பயணிகள் இருந்தனர்.

அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானப் பணிப்பெண் ஒருவர் கழிவறைக்கு சென் றார். அப்போது கழிவறைக் குள் கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடப்பதை கண்டார்.

அந்த துண்டுச் சீட்டில், “இந்த விமானம் கடத்தப்படும். பிறகு இந்த  விமானத்தை குண்டு வைத்து தகர்ப்போம்“ என்று மிரட்டல் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் அந்த விமானப் பணிப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அந்த பணிப்பெண் இதுபற்றி விமான பைலட்டுக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பைலட், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு “விமானத்துக்குள் வெடிப்பொருட்களுடன் கடத்தல்காரர்கள் உள்ளனர்”என்று கூறினார்.விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானத்தை உடனே தரை இறக்கும்படி கூறினார்கள். அதன் பேரில் 3.45 மணிக்கு அந்த விமானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

பின்னர் அனைத்துப் பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். பயணிகள் அனைவரையும் போலீசார் சோதனையிட்டனர். அவர்களது உடமைகளும் சோதிக்கப்பட்டன.விமானத்தில் இருந்த 7 பணிப்பெண்களும் சோதிக்கப்பட்டனர். விமானப் பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

விமான கழிவறைக்குள் மிரட்டல் துண்டு சீட்டை எழுதிப் போட்டது யார் என்று பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தினார்கள்.

Next Story