சீனாவின் பாகிஸ்தான் பாசம்! மீண்டும் பயங்கரவாதி மசூத் அசாரை பாதுகாப்போம் என சூசகம்


சீனாவின் பாகிஸ்தான் பாசம்! மீண்டும் பயங்கரவாதி மசூத் அசாரை பாதுகாப்போம் என சூசகம்
x
தினத்தந்தி 30 Oct 2017 9:54 AM GMT (Updated: 2017-10-30T17:02:59+05:30)

பயங்கரவாதத்திற்கு புகலிடம் கொடுத்து வளர்த்துவரும் பாகிஸ்தானின் மீது மீண்டும் சீனா தன்னுடைய பாசத்தை காட்டிஉள்ளது.

பெய்ஜிங்,

பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிட ஐ.நா.வில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து மேற்கொள்ளும் முயற்சியை தடுப்போம் என்றே சீனாவின் தகவல் குறிப்பிடுகிறது. 
 
பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மவுலானா மசூத் அசார் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் இந்தியா முறையிட்டது. இந்தியாவின் முறையீடு தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ‘1267 குழு’ கூடியது. கடந்த வருடம் மார்ச் மாதம் நடந்த இந்த கூட்டத்தில் மசூத் அசாரை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதிப்பதற்கு பாதுகாப்பு கவுன்சிலின் 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் சீனா இதை ஏற்கவில்லை.

 மசூத் அசார் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நினைத்ததை சாதித்தது. 

வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சீனா, மசூத் அசார் மீதான நடவடிக்கையை தடுத்து நிறுத்தியது. பதன்கோட் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட மசூத் அசாருக்கு தீவிரவாதிக்கு உரிய தகுதி இல்லை என சீனா கூறியது. ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத விவகாரத்தில் இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறது. 

பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடைவிதிக்க தொழில்நுட்ப வேறுபாடுகளை காரணம் காட்டி சீனா நிறுத்துகிறது. கடந்த ஆகஸ்ட் மாதமும் அவனை சர்வதேச பயங்கரவாதியை அறிவிக்க சீனா தடையை ஏற்படுத்தியது, பின்னரும் மூன்று மாத காலம் நீட்டிக்கப்பட்டது. இதுபோன்று தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இப்போதும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிட அனுமதிக்க மாட்டோம் என்றே சீனாவின் வெளியுறவுத்துறை தகவல் உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கு மட்டும் இந்த மறுப்புரிமை அதிகாரம் (வீட்டோ) உள்ளது. உலகில் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து உள்ளது. இவ்விவகாரத்தில் சீனா மட்டும் தனித்து நிற்கிறது. 

Next Story