திருப்பதி அருகே போலீசாருடன் செம்மரக்கடத்தல் கும்பல் மோதல்–துப்பாக்கிச்சூடு


திருப்பதி அருகே போலீசாருடன் செம்மரக்கடத்தல் கும்பல் மோதல்–துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 30 Oct 2017 10:29 PM GMT (Updated: 2017-10-31T03:59:30+05:30)

திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் அருகே உள்ள பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்

ஸ்ரீகாளஹஸ்தி,

திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் அருகே உள்ள பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். பாக்ராப்பேட்டையை அடுத்த ஜருடுபண்டா என்ற இடத்தில் செம்மரக்கடத்தல் கும்பல் இருப்பது தெரியவந்ததால் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்த 20–க்கும் மேற்பட்ட செம்மரக்கடத்தல்காரர்கள், போலீசார் மீது கற்களை எடுத்து வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசாரும், செம்மரக்கடத்தல்காரர்களும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசி தாக்கி மோதிக்கொண்டனர். இந்த மோதலில் பாலகிருஷ்ணா என்ற போலீஸ்காரருக்கு கையிலும், தலையிலும் ரத்தக்காயம் ஏற்பட்டது.

இதனால் போலீசார் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டு, சரண் அடையும் படி செம்மரக்கடத்தல்காரர்களை எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அவர்கள் தப்பித்து நாலாபுறமும் சிதறி ஓடி விட்டனர். தப்பி ஓடியவர்களில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பிடிப்பட்டார். அவரின் பெயர் விவரங்கள் தெரியவில்லை.

செம்மரக்கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற ரூ.8 லட்சம் மதிப்பிலான 13 செம்மரக்கட்டைகள், 6 கோடரி, மரம் அறுக்கும் ஒரு வாள், அரிவாள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story