மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு


மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 30 Oct 2017 10:42 PM GMT (Updated: 30 Oct 2017 10:42 PM GMT)

காந்தியின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948–ம் ஆண்டு டெல்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக நதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் கைது செய்யப்பட்டு 1949–ம் ஆண்டு தூக்கில் போடப்பட்டனர். காந்தி கொல்லப்பட்டு சுமார் 70 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மும்பையை சேர்ந்த பங்கஜ் பட்னிஸ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

காந்தியின் கொலையில் 3–வது நபர் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் அதுகுறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டு இருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இதில் கோர்ட்டுக்கு உதவுவதற்காக மூத்த வக்கீல் அம்ரேந்தர் சரணை நியமித்தது.

இந்த நிலையில் காந்தியின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எம்.எம்.சந்தானகவுடர் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரத்தில் தனக்கு தேவையான ஆவணங்கள் இன்னும் கிடைக்காததால், 4 வாரம் அவகாசம் வேண்டும் என அம்ரேந்தர் சரண் நீதிபதிகளிடம் கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


Next Story