இடுக்கி அணை அமைய காரணமாக இருந்த குறவனுக்கு ரூ.70 லட்சத்தில் வெண்கல சிலை


இடுக்கி அணை அமைய காரணமாக இருந்த குறவனுக்கு ரூ.70 லட்சத்தில் வெண்கல சிலை
x
தினத்தந்தி 31 Oct 2017 5:49 AM GMT (Updated: 2017-10-31T11:18:59+05:30)

இடுக்கி அணை அமைய காரணமாக இருந்த குறவனுக்கு ரூ.70 லட்சத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டு வருகிறது.

இடுக்கி,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் செருதோணியில் ஆசியாவின் 2-வது மிகப்பெரிய அணையாக இடுக்கி அணை உள்ளது. குறவன்-குறத்தி மலைகளை இணைத்து மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 555 அடி ஆகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் மூலமற்றம் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் தினசரி 780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கேரளத்தின் 40 சதவீத மின் உற்பத்தியை பூர்த்தி செய்கிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த இடுக்கி அணை உருவான விதம் சுவாரசியமானது. அது குறித்த விவரத்தை காண்போம். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் செருதோணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிகம் வசித்தனர். இவர்கள் மலைப்பகுதிகளில் உருவாகும் காட்டாற்றை கடந்து சென்று வனப்பகுதியில் தேன் சேகரித்தும், வனவிலங்குகளை வேட்டையாடியும் வந்தனர். இந்த நிலையில் ஆங்கிலேயர்களும் வனவிலங்குகளை வேட்டையாட மலைவாழ் மக்களை பயன்படுத்தினர்.

வெள்ளப்பெருக்கு

1932-ம் ஆண்டு செருதோணி பகுதியில் உள்ள ஒரு எஸ்டேட்டின் மேலாளராக இருந்த ஜான் என்ற ஆங்கிலேயர் அப்பகுதி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த கொலும்பன் என்ற குறவன் இனத்தை சேர்ந்தவரை வனவிலங்குகள் வேட்டைக்காக அழைத்துச்செல்வாராம். இந்த நிலையில் ஒருமுறை குறவன் தனது மனைவியுடன் அப்பகுதியில் உள்ள ஆற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் ஆற்றின் கரைப்பகுதியில் சிக்கிக்கொண்டார். 3 நாட்கள் அங்கேயே தவித்த அவர், பின்னர் வீடு திரும்பி உள்ளார். இதையறிந்த ஜான், அவரை சந்தித்து மழையில் சிக்கிக்கொண்ட விவரம் குறித்து கேட்டுள்ளார். அப்போது பலத்த மழையால் 2 மலைகளுக்கு இடையே ஓடும் ஆற்றின் ஒரு கரையில் தான் சிக்கிக்கொண்டதையும், மறுகரையில் அவருடைய மனைவி குறத்தி கலக்கத்துடன் காத்திருந்ததையும் தெரிவித்துள்ளார்.

வரைபடம்

மேலும் அந்த இடத்துக்கும் ஜானை அழைத்துச்சென்று கொலும்பன் காட்டியுள்ளார். அப்போது பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் 2 மலைகளுக்கு இடையே ஓடும் ஆற்றை பார்த்த ஜானுக்கு, ஆற்றுநீரை தடுத்து நிறுத்தி சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே அவர் தனது தம்பியும் என்ஜினீயருமான மார்க்கிடம் இது குறித்து தெரிவித்தார். பின்னர் தம்பியை அழைத்துச்சென்று ஆறு அமைந்துள்ள இடத்தையும் காண்பித்தார்.

அவர், 2 மலைகளையும் இணைத்து அணை கட்டினால் தண்ணீரையும் சேமிக்கலாம், மின் உற்பத்தியும் செய்ய முடியும் என கூறியுள்ளார். தொடர்ந்து அது தொடர்பான வரைபடம் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்து அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால் அணை கட்டும் திட்டத்தை திருவிதாங்கூர் சமஸ்தான நிர்வாகிகள் கிடப்பில் போட்டனர்.

இந்திராகாந்தி திறந்து வைத்தார்

பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1963-ம் ஆண்டு இடுக்கி அணை கட்டும் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டின. அதன் பலனாக கனடாநாட்டு நிதி உதவியுடன் 1969-ம் ஆண்டு அணைக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டு இடுக்கி அணை கட்டி முடிக்கப்பட்டது.

அணையை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மார்க் சமர்ப்பித்த வரைபடம் மற்றும் திட்ட அறிக்கையின்படி இந்த அணை கட்டப்பட்டது. மேலும் திட்ட அறிக்கையில் அணை அமைய உள்ள இடத்தை குறவன், குறத்தி இனத்தை சேர்ந்தவர்கள் காட்டிக்கொடுத்ததால் அப்பகுதியில் உள்ள 2 மலைகளையும் குறவன், குறத்தி மலை என்றே குறிப் பிட்டிருந்தார்.

வெண்கல சிலை

அதன் அடிப்படையிலேயே இடுக்கி அணை அமைக்கப்பட்ட போது, அங்குள்ள 2 மலைகளுக்கு குறவன், குறத்தி என்று பெயரிடப்பட்டது. அதன் பின்னர் வந்த அரசுகள் இடுக்கி அணை உருவாக காரணமாக இருந்த குறவன், குறத்தி ஆகியோருக்கு அணை அருகிலேயே சிமெண்டால் ஆன சிலைகளை அமைத்தது.

இந்த நிலையில் தற்போது சிமெண்டால் ஆன சிலையை அகற்றிவிட்டு குறவனுக்கு ரூ.70 லட்சத்தில் வெண்கல சிலை அமைக்க கேரள அரசு முடிவு செய்து அதற்கான நிதியையும் ஒதுக்கியது. இதையடுத்து குறவனுக்கு வெண்கலத்தால் சிலை உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. வருகிற ஜனவரி மாதத்துக்குள் சிலை உருவாக்கப்பட்டுவிடும் என சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிற்பி முரளி கூறினார். 

Next Story