ரெயில்வே பாலம் கட்ட ராணுவம்; முன்னாள் கேப்டன் பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் எதிர்ப்பு


ரெயில்வே பாலம் கட்ட ராணுவம்; முன்னாள் கேப்டன் பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் எதிர்ப்பு
x
தினத்தந்தி 31 Oct 2017 10:17 AM GMT (Updated: 2017-10-31T15:47:06+05:30)

ரெயில்வே பாலம் கட்ட ராணுவம் பயன்படுத்தப்படுவதற்கு முன்னாள் கேப்டனும், பஞ்சாப் முதல்-மந்திரியுமான அம்ரீந்தர்சிங் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

சண்டிகார்,
 
மும்பை எல்பின்ஸ்டன் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விபத்து நேரிட்ட இடத்தை மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கூட்ட நெரிசல் காரணமாக விபத்து நேரிட்ட எல்பின்ஸ்டன் ரெயில் நிலையம் உள்பட மூன்று பகுதிகளில் ரெயில்வே நடைமேம்பாலம் அமைக்க ராணுவம் உதவி செய்யும் என்றார். 

“மும்பையில் என்பின்ஸ்டன் ரெயில் நிலையம் மற்றும் இரு புறநகர் ரெயில் நிலையங்களில் ரெயில்வே நடைமேம்பாலம் கட்ட நாங்கள் ராணுவத்தின் உதவியை பெற்று வருகிறோம். நடைமேம்பாலம் கட்டும் பணியானது ஜனவரி 31-ம் தேதி முடிக்கப்படும் என என்னிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது,” என்றார் தேவேந்திர பட்னாவிஸ். மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலும் இச்செய்தியை உறுதி செய்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டார். 

ராணுவம் பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பிற்கு பஞ்சாப் மாநில முதல்-மந்திரியும், முன்னாள் கேப்டனுமான அம்ரீந்தர்சிங் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார். “இந்திய ராணுவத்திற்கு போருக்கு பயிற்சி அளிக்கவேண்டும், சிவிலியன்
பணிக்காக ராணுவத்தை பயன்படுத்தக்கூடாது சீத்தாராமன் ஜி. பாதுகாப்பு வழங்களை சிவிலியன் பணிக்காக பயன்படுத்தாதீர்கள். 1962 சீன போருக்கு முன்னதாக அப்போதைய ஜெனரல் கவுல் செய்ததையே நீங்கள் இப்போது செய்கிறீர்கள். இது மிகவும் மோசமான நகர்வாகும், இதனை தவிர்த்துவிடுங்கள்,” என டுவிட்டரில் அம்ரீந்தர்சிங் கூறிஉள்ளார்.

Next Story