சபரிமலை கோவிலில் நடை அடைப்பு இல்லை திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம்


சபரிமலை கோவிலில் நடை அடைப்பு இல்லை திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம்
x
தினத்தந்தி 28 Nov 2017 11:45 PM GMT (Updated: 2017-11-29T02:10:29+05:30)

சபரிமலை கோவிலில் நடை அடைப்பு இல்லை என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

சபரிமலை,

கேரள மாநிலம் பந்தளம் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர் அம்பா தம்புராட்டி (வயது 94). இவர் கடந்த 25–ந் தேதி மரணம் அடைந்தார். அதன் காரணமாக பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில் நடை வருகிற 6–ந் தேதி வரை அடைக்கப்படுவதாக ராஜகுடும்பத்தினர் தெரிவித்தனர். 6–ந் தேதி நடைபெறும் சுத்தி கலச சடங்குகளுக்கு பின்னர் கோவில் நடை திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அம்பா தம்புராட்டி மரணத்தை தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 7 நாட்களுக்கு அடைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. அது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம் அளித்து இருக்கிறது.

இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்படுவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி ஆகும். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை தினமும் வழக்கம்போல் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

அடுத்த மாதம் (டிசம்பர்) 26–ந் தேதி மண்டல பூஜைக்கு பின், அன்றைய தினம் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். டிசம்பர் 30–ந் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 14–ந் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஜனவரி 20–ந் தேதி நடை அடைக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story