பெரிய நிறுவனங்களின் வராக்கடன்கள் தள்ளுபடியா? வதந்தி என அருண் ஜெட்லி விளக்கம்


பெரிய நிறுவனங்களின் வராக்கடன்கள் தள்ளுபடியா? வதந்தி என அருண் ஜெட்லி விளக்கம்
x
தினத்தந்தி 29 Nov 2017 1:08 AM GMT (Updated: 2017-11-29T06:38:49+05:30)

பெரிய நிறுவனங்களின் வராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக வெளியான தகவல்களுக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி, 

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–பொதுத்துறை வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்ற பெரிய நிறுவனங்களின் வராக்கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகிறது. இது திட்டமிட்ட வதந்தி ஆகும். இதில் துளியும் உண்மை கிடையாது.

இதற்கு முன்பு மத்திய அரசில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் தான் 2008–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரை பெரிய நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க எந்த நடவடிக்கையும் அந்த அரசு எடுக்கவில்லை.அவ்வாறு வதந்தி பரப்புவோரிடம் யாருடைய உத்தரவின் பேரில் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். மேலும் கடந்த ஆட்சியில் பெரிய நிறுவனங்களுக்கு எப்படி கடன் வழங்கப்பட்டது? அதை வசூலிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் மக்கள் கேட்க வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளில் வங்கிகளின் நிதி நிலையை மேம்படுத்த மத்திய பா.ஜனதா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வங்கிகளுக்கு கூடுதல் நிதி அளிக்க முடிவு செய்து உள்ளது. வங்கிகளில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து வராக்கடன்களை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story