காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி, டிசம்பர் 4–ந் தேதி வேட்புமனு தாக்கல்?


காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி, டிசம்பர் 4–ந் தேதி வேட்புமனு தாக்கல்?
x
தினத்தந்தி 29 Nov 2017 11:15 PM GMT (Updated: 29 Nov 2017 8:06 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி டிசம்பர் 4–ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும், அதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிவார் என தகவல்கள் கூறுகின்றன.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரியக்கமிட்டி கடந்த 20–ந் தேதி டெல்லியில் கூடி, காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இறுதி செய்து அறிவித்தது.

இந்த அட்டவணையின்படி தேர்தல் அறிக்கை நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 4–ந் தேதி கடைசி நாள். வேட்பு மனு பரிசீலனை 5–ந் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3.30 மணிக்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

வேட்பு மனுக்களை திரும்பப்பெறுவதற்கு டிசம்பர் 11–ந் தேதி கடைசிநாள்.

தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான ராகுல் காந்தி (வயது 47) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யாரேனும் போட்டியிட்டால், டிசம்பர் 16–ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை 19–ந் தேதி நடைபெறும்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்திக்கு போட்டி இல்லை என அந்தக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

அவர் தனது வேட்பு மனுவை டிசம்பர் 4–ந் தேதி தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது எனவும், அந்த வேட்பு மனுவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே. அந்தோணியும் முன்மொழிவார்கள் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.



Next Story