ஹபீஸ் சயீத்துடன் ஒரே மேடையில் தோன்றியதால் அதிருப்தி: உடனடியாக தூதரை திரும்ப அழைத்தது பாலஸ்தீனம்


ஹபீஸ் சயீத்துடன் ஒரே மேடையில் தோன்றியதால் அதிருப்தி: உடனடியாக தூதரை திரும்ப அழைத்தது பாலஸ்தீனம்
x
தினத்தந்தி 30 Dec 2017 1:19 PM GMT (Updated: 2017-12-30T18:49:01+05:30)

ஹபீஸ் சயீத்துடன் ஒரே மேடையில் தங்கள் நாட்டு தூதர் தோன்றியதால் அதிருப்தி அடைந்த பாலஸ்தீனம், அந்நாட்டு தூதரை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது. #HafizSaeed

புதுடெல்லி,

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். ஐக்கிய நாடுகள் அவை ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ள போதிலும் பாகிஸ்தானில் சுதந்திரமாக ஹபீஸ் சயீத் உலவி வருகிறார். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்பால் கடந்த ஜனவரி மாதம் முதல் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் வீட்டுக்காவலில் அடைத்தது. இருப்பினும் நிதிமன்ற உத்தரவால், ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டார். மில்லி முஸ்லீம் லீக் என்ற கட்சியை துவங்கியுள்ள ஹபீஸ் சயீத், வரும் பாகிஸ்தான் பொதுதேர்தலிலும் போட்டியிட உள்ளதாக கூறி வருகிறார். இதற்கு உலக நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. 

இந்த சூழலில், பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பாலஸ்தீனத்தின் தூதர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பாலஸ்தீன தூதரும் ஹபீஸ் சயீத்தும் ஒரே மேடையில் இருந்த புகைப்படங்கள் வெளியாகின. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

டெல்லியில் உள்ள பாலஸ்தீன தூதரகத்திலும், பாலஸ்தீன தலைநகர் ரமல்லாவில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்தது. இதையடுத்து, வருத்தம் தெரிவித்த பாலஸ்தீனம், பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட நபருடன் பாலஸ்தீன அதிகாரிகள் கலந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்த விவாகாரத்தை உரிய முறையில் கையாள்வதாகவும் உறுதி அளித்தது. இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. 

இதற்கிடையில், அதிருப்தியை பதிவு செய்யும் வகையில் ஹபீஸ் சயீத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தானுக்கான  பாலஸ்தீன தூதர் வலிட் அபு அலியை உடனடியாக நாடு திரும்புமாறு பாலஸ்தீனம் அழைப்பு  விடுத்துள்ளது. 40 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இணைந்து டிபா இ பாகிஸ்தான் கவுன்சில் என்ற கூட்டணியின் பிரதான தலைவராகவும் விளங்கும் ஹபீஸ் சயீத், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் நகரை அறிவித்தற்கு எதிராக இஸ்லாமிக் உச்சி மாநாட்டை பாகிஸ்தான் நடத்த வேண்டும் என வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தான், பாலஸ்தீன தூதரும் கலந்து கொண்டது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

Next Story