ரஜினி வருகையால் தி.மு.க.வுக்கு பாதிப்பு இல்லை மு.க.ஸ்டாலின் பேட்டி


ரஜினி வருகையால் தி.மு.க.வுக்கு பாதிப்பு இல்லை மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 31 Dec 2017 8:34 AM GMT (Updated: 2017-12-31T14:04:17+05:30)

அரசியலுக்கு ரஜினி வருகையால் திமுகவிற்கு பாதிப்பு இல்லை என மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #Stalin #Rajinikanth #Rajinikanthpoliticalentry


சென்னை, 


அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார். 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியை நல உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் கேள்வி பதில் விபரம்:-

கேள்வி: அரசியல் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து இருக்கிறாரே?

பதில்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுடைய நீண்டகால எதிர்பார்ப்புக்கு இன்றைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன். அதற்காக, எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே: ரஜினியின் அரசியல் வருகை திமுகவுக்கு சாத கமா? அல்லது பாதகமாக இருக்குமா?

ப: திமுகவை பொறுத்த வரையில், சாதக, பாதகங்கள் பற்றி என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது. ஏற்றுக் கொண்டுள்ள கொள்கைகள் வழியில் நின்று, தன்னுடைய வெற்றிப் பாதையை திமுக நிச்சயம் அடையும்.

கே: சட்டமன்றம் தொடங்கிய பிறகு திமுகவின் அணுகுமுறை என்னவாக இருக்கும்?

ப: அதை இப்போதே சொல்லிவிட்டால் உங்களுக்கு சுவாரசியமாக இருக்காது. எனவே, தொடங்கிய பிறகு பார்க்கலாம்.

கே: 4,000 அரசு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டு, பேருந்து பயணக் கட்டணமும் அதிகரிக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதே?

ப: ஒரே வரியில் சொல்வதெனில், இந்த ‘குதிரை பேர’ ஆட்சி செயல்படாத ஆட்சியாக இருக்கிறது. மெஜாரிட்டி இல்லாமல் நடக்கும் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்த்து, அதற்காக காத்திருக்கிறார்கள். ஆனால், மக்களின் இந்த எதிர்பார்ப்புக்கு, மத்தியில் இருக்கின்ற பிஜேபி ஆட்சி அதற்கு முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Next Story