மராட்டியத்தில் இருதரப்பினர் இடையிலான மோதலில் வாலிபர் உயிரிழப்பு, வன்முறை வெடித்தது


மராட்டியத்தில் இருதரப்பினர் இடையிலான மோதலில் வாலிபர் உயிரிழப்பு, வன்முறை வெடித்தது
x
தினத்தந்தி 2 Jan 2018 12:40 PM GMT (Updated: 2 Jan 2018 12:40 PM GMT)

மராட்டியத்தில் இருதரப்பினர் இடையிலான மோதலில் வாலிபர் உயிரிழந்தார், இதனையடுத்து வன்முறை வெடித்து உள்ளது. #ViolenceinMaharashtra #BhimaKoregaonclashes


மும்பை,


புனே மாவட்டம் கோரேகாவ் பீமா பகுதியில் நேற்று இரு சமூகத்தினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார். இதனால் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போலீஸ் வேன் உள்பட 15 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. 

இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை கலைத்து நிலைமைய கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவியதால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்தநிலையில், மோதலில் வாலிபர் பலியான சம்பவத்தை கண்டித்து மும்பையில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் நேற்று திடீரென போராட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றதை அடுத்து துறைமுக வழித்தடத்தில் ரெயில்சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே கல்வீச்சு மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் பதிவாகியது.

போராட்டம் காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி நடந்து சென்றனர். எனினும் ரெயில் மறியல் போராட்டத்தின் போது சி.எஸ்.எம்.டி. – குர்லா, பன்வெல் – வாஷி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதாக மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. மும்பையில் நடந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் பெஸ்ட் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் அவற்றின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடைகள் அனைத்தையும் மூடுமாறு உரிமையாளர்களை மிரட்டினர். வலுக்கட்டாயமாக சில கடைகளின் ‌ஷட்டரை இழுத்து மூடவும் செய்தார்கள். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதால் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டது, சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சாலை மற்றும் கல்வீச்சு சம்பவங்களால் மும்பை முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பஸ்கள் மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதற்கிடையே முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.Next Story