தேசிய செய்திகள்

‘‘தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளை விட உயர்ந்தவர் அல்ல’’ + "||" + Chief Justice More than other judges Not superior

‘‘தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளை விட உயர்ந்தவர் அல்ல’’

‘‘தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளை விட உயர்ந்தவர் அல்ல’’
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 4 மூத்த நீதிபதிகள் எழுதியுள்ள கடிதத்தில், வழக்குகளை ஒதுக்கும் உரிமை இருப்பதால் தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளை விட உயர்ந்தவர் அல்ல என்று கூறி உள்ளனர்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் கூட்டாக எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மேதகு தலைமை நீதிபதி அவர்களுக்கு, சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த சில உத்தரவுகள், நீதித்துறையின் செயல்பாட்டை பாதித்துள்ளது குறித்து எங்கள் ஆதங்கம் மற்றும் அக்கறையை தெரிவிக்கவே இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதி இருக்கிறோம். இது நம்முடைய நீதித்துறை, ஐகோர்ட்டுகள் மற்றும் தலைமை நீதிபதி அலுவலகம் ஆகியவை தொடர்பான செயல்பாட்டு நிர்வாகத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.

கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய ஐகோர்ட்டுகள் அவை உருவான காலத்தில் இருந்தே கோர்ட்டு நிர்வாகம் தொடர்பாக சில நடைமுறைகளும், மரபுகளும் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த மூன்று ஐகோர்ட்டுகளுக்கு பிறகு நிறுவப்பட்ட சுப்ரீம் கோர்ட்டும் இதே நடைமுறைகளையும், மரபுகளையும் கடைப்பிடித்து வருகின்றது. இந்த நிர்வாக நடைமுறைகள் மற்றும் மரபுகள் ஆங்கிலேயர்கள் காலத்தின் நீதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் வேரூன்றியவையாகும்.

பல்வேறு அமர்வுகள் உள்ள கோர்ட்டில் வழக்குகளை உரிய அமர்வுக்கு பட்டியலிடும் பிரச்சினையில், அந்த வழக்கின் முன்னுரிமை அடிப்படையில் முடிவு செய்வது என்பதும், தேவை ஏற்படும்போது, அமர்வுகள், நீதிமன்றங்களையும் முன்னுரிமை அடிப்படையில் முடிவு செய்வதும், அமர்வின் நீதிபதிகளை முடிவு செய்வதும், தலைமை நீதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட உரிமை என்பது மரபாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

எந்த வழக்கை யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பது யாருக்கும் சட்ட உரிமையாக அங்கீகரிக்கப்படாத போதும், கோர்ட்டு நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழிமுறை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த உரிமை தலைமை நீதிபதிக்கு அளிக்கப்படுவதால் அவர் நடைமுறையிலோ அல்லது சட்டப்படியோ மற்ற நீதிபதிகளை விட உயர்ந்தவர் என்பது ஆகாது. சட்டத்தின் அடிப்படையில் நீதிபதிகளில், தலைமை நீதிபதி முதன்மையானவர். ஆனால் அதே சமயத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மற்ற நீதிபதிகள் அவருக்கு குறைவானவர்களோ அல்லது உயர்வானவர்களோ அல்ல.

வழக்குகளை பட்டியலிடும் நடைமுறை என்பது சரியான முறையிலும், உரிய நேரத்திலும் நடைபெற தலைமை நீதிபதி வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற மரபுகள், கோர்ட்டுக்கு கூடுதல் வலிமையை அளிப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது.

அதே சமயம் வழக்கின் தன்மை மற்றும் அது தொடர்பான அம்சங்களை கருத்தில் கொண்டு வழக்குகள் பட்டியலிடப்படுவதும், அமர்வுகள் முடிவு செய்யப்படுவதும் நடைமுறையில் இருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை சம்பந்தபட்ட நீதிபதிகளுக்கு எந்த வகையிலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

இந்த நடைமுறையில் இருந்து விலகிச் செல்வது நிறுவனத்தின் நேர்மையின் மீது தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் செயலாக மாறும் ஆபத்து உள்ளது. இதுபோன்ற விதிமீறல்களால் ஏற்படும் குழப்பங்கள் குறித்து எதுவும் கூறத்தேவையில்லை.

மேலே கூறப்பட்ட நடைமுறைகள் எவையும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் நாங்கள் கூறவேண்டி உள்ளது.

இந்த நாட்டுக்கும், நம்முடைய நிறுவனத்துக்கும் பலகாலம் நீடிக்கக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வழக்குகள் எந்த விதமான பகுத்தாய்வும் இன்றி தங்கள் விருப்பத்துக்கேற்ற நீதிபதிகளுக்கும், அமர்வுகளுக்கும் நம்முடைய தலைமை நீதிபதியால் விசாரணைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இது அனைத்து வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய ஒரு வி‌ஷயமாகும்.

நம்முடைய நீதித்துறையை தர்மசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம் என்ற நோக்கில் நாங்கள் இது தொடர்பான விவரங்களை குறிப்பிடாமல் தவிர்க்கிறோம். ஆனால் இது போன்ற மீறல்கள் நம்முடைய நிறுவனத்தின் மீதான படிமத்தை ஏற்கனவே ஓரளவுக்கு சேதப்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 10–ந் தேதியன்று மத்திய அரசுக்கு எதிராக ஆர்.பி.லுத்ரா என்பவர் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவை பொறுத்தவரை, பொதுநலனை கருத்தில் கொண்டு செயல்முறை குறிப்பாணையை முடிவு செய்வதில் மேலும் தாமதம் ஏற்படக்கூடாது என்பதாகும். இந்த செயல்முறை குறிப்பாணையை முடிவு செய்ய வேண்டும் என்பது மத்திய அரசுக்கு எதிராக ‘அட்வகேட்ஸ் ஆன் ரெகார்டு அசோசியே‌ஷன்’ அமைப்பு தொடுத்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வின் முடிவு ஆகும். இது இப்படி இருக்க வேறு அமர்வு இந்த வழக்கை விசாரித்தது எப்படி என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவு, வக்கீல்கள் மற்றும் மத்திய அரசின் நிலைப்பாடு ஆகியவை தொடர்பாக மிகவும் முக்கியம் வாய்ந்தது ஆகும்.

இதுதொடர்பாக அரசியல் சாசன அமர்வு, 5 நீதிபதிகள் அடங்கிய கொலிஜியத்தின் கருத்துகளை கேட்டு அறிந்தது. செயல்பாட்டு குறிப்பாணையை தலைமை நீதிபதி முடிவு செய்த பிறகு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பான தலைமை நீதிபதியின் கேள்விக்கு, மத்திய அரசு இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை.

கோர்ட்டு உருவாக்கிய செயல்பாட்டு குறிப்பாணையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அவர்கள் கடைபிடிக்கும் மவுனம் உறுதி செய்கிறது. எனவே, செயல்பாட்டு குறிப்பாணையை கோர்ட்டு மேலும் தாமதிக்காமல் முடிவு செய்யவேண்டும்.

கடந்த ஆண்டு ஜூலை 7–ந் தேதியன்று நீதிபதி கர்ணன் தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் நீதிபதிகள் தேர்வு தொடர்பான நடைமுறைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இரு நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தோம். பதவி நீக்கம் மட்டுமே தீர்வு அல்ல. நிலைமையை சீர்படுத்தவும் சில நடைமுறைகளை உருவாக்கவேண்டும் என்றும் தெரிவித்து இருந்தோம்.

செயல்முறை குறிப்பாணை தொடர்பான பிரச்சினைகளை தலைமை நீதிபதிகள் மாநாடு அல்லது முழு அமர்வு மட்டுமே விவாதிக்க வேண்டும். இதுபோன்ற மிகவும் முக்கியமான வி‌ஷயங்களை நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படும்போது அந்த வழக்கில் அரசியல் அமர்வு தவிர வேறு எந்த அமர்வும் முடிவெடுக்க முடியாது.

மேலே கூறப்பட்டுள்ளதை மிகவும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இந்த நிலைமையை சீராக்க வேண்டியதும், கொலிஜியத்தில் உள்ள மற்ற நீதிபதிகளுடன் தேவையான ஆலோசனை மேற்கொண்டு, தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டின் மற்ற நீதிபதிகளுடன் கலந்தாலோசித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தலைமை நீதிபதியின் கடமை ஆகும்.

மேலே குறிப்பிட்டுள்ள ஆர்.பி.லுத்ரா வழக்கில் கடந்த அக்டோபர் 27–ந் தேதி வழங்கிய தீர்ப்பு குறித்து நீங்கள் நடவடிக்கை எடுத்ததும் தேவைப்பட்டால், இதேபோன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வேறு சில தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் பற்றியும், அவை குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நாங்கள் உங்களுக்கு விளக்கமாக எடுத்து உரைப்போம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் கடிதத்தில் கூறி உள்ளனர்.