தேசிய செய்திகள்

தலைமை நீதிபதி-4 மூத்த நீதிபதிகள் மோதல் பிரச்சினை முடிவுக்கு வந்தது + "||" + Chief Justice -4 Senior Judges conflict The problem ended

தலைமை நீதிபதி-4 மூத்த நீதிபதிகள் மோதல் பிரச்சினை முடிவுக்கு வந்தது

தலைமை நீதிபதி-4 மூத்த நீதிபதிகள் மோதல் பிரச்சினை முடிவுக்கு வந்தது
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும், 4 மூத்த நீதிபதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
புதுடெல்லி,

இந்திய வரலாற்றில் முதன் முதலாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக அங்கு பணிபுரியும் மூத்த நீதிபதிகளான ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று போர்க்கொடி உயர்த்தினார்கள். அன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள் சுப்ரீம் கோர்ட்டின் நிர்வாகத்தில் குளறுபடி இருப்பதாகவும், வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்கள். அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு தாங்கள் கூட்டாக எழுதிய கடிதத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.


தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும், 4 மூத்த நீதிபதிகளுக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆகியோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.

4 மூத்த நீதிபதிகள் எழுப்பிய பிரச்சினை மிகவும் முக்கியமானது என்றும், இதற்கு தீர்வு காணவேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

இதற்கிடையே, இந்த மோதல் பிரச்சினையில் சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய பார் கவுன்சில், இதற்காக 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழுவினர் மேற்கொண்ட தீவிர முயற்சியை தொடர்ந்து, இந்த மோதல் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீதித்துறையின் உயர்ந்த அமைப்பான சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இந்திய பார் கவுன்சில் குழு உறுப்பினர்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 15 பேரை சந்தித்து பேசினார்கள். அப்போது அந்த நீதிபதிகள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக அவர்களிடம் உறுதியாக தெரிவித்து உள்ளனர்.

எனவே இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. அனைத்து கோர்ட்டுகளும் செயல்படுகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் பணியை மேற்கொள்கிறார்கள். தங்களுக்குள் பேசி பிரச்சினையை தீர்த்துக்கொண்ட தலைமை நீதிபதிக்கும், 4 மூத்த நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பிரச்சினையை யாரும் அரசியல் ஆக்குவதை இந்திய பார் கவுன்சில் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், இது (தலைமை நீதிபதிக்கும், 4 மூத்த நீதிபதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்) தேநீர் கோப்பையில் ஏற்பட்ட புயலை போன்றது என்றும், தற்போது எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டதாகவும், சுப்ரீம் கோர்ட்டு வழக்கம் போல் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய மூத்த நீதிபதிகளான ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அனைவரும் ஒன்றாக தேநீர் அருந்தினார்கள்.

தலைமை நீதிபதியும், மற்ற நீதிபதிகளும் நேற்று வழக்கம் போல் தங்கள் பணியில் ஈடுபட்டனர்.

சர்ச்சைக்கு உள்ளான சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் தொடர்பான வழக்கை விசாரித்த சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி பி.எச்.லோயா மாரடைப்பால் இறந்தது தொடர்பான வழக்கு விசாரணையை எந்த அமர்வுக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை பேட்டியின் போது நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், மறைந்த நீதிபதி பி.எச்.லோயாவின் மகன் அனுஜ் லோயா கூறுகையில், தனது தந்தையின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், இது தொடர்பாக தங்களை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.