ஹஜ் இல்லத்திற்கு மீண்டும் வெள்ளை நிறம் பூசியது ஏன்? செயலாளருக்கு உ.பி. அரசு கேள்வி; பதவி நீக்கம்!


ஹஜ் இல்லத்திற்கு மீண்டும் வெள்ளை நிறம் பூசியது ஏன்? செயலாளருக்கு உ.பி. அரசு கேள்வி; பதவி நீக்கம்!
x
தினத்தந்தி 16 Jan 2018 1:46 PM GMT (Updated: 16 Jan 2018 1:46 PM GMT)

உத்தரபிரதேசத்தில் ஹஜ் இல்லத்திற்கு காவி வர்ணம் பூசப்பட்ட சர்ச்சையில் சிக்கிய செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். #HajCommittee


லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் யோகி ஆதித்யநாத் அரசின் காவி மையம் தொடங்கியது. 

மாநிலத்தில் உள்ள பள்ளிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிகுகூட பைகள், பேருந்துக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்தும் காவி வர்ணத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டு வந்தது. அதில் உச்சமாக லக்னோவில் உள்ள ஹஜ் இல்லமும் காவியாகியது. ஹஜ் இல்லத்தின் வெளிப்புற சுவரில் காவி வர்ணம் பூசப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. மாநில தலைமை செயலகத்திற்கு எதிராக உள்ள ஹஜ் இல்லம் காவியாக காட்சி அளித்தது பல்வேறு தரப்பிற்கு அதிர்ச்சியாக இருந்தது. 

ஒரேநாள் இரவில் காவி நிறம் பூசப்பட்டது. காவி நிறம் பூசப்பட்டதற்கு இஸ்லாமிய சமூதாயத்தில் இருந்து பெரும் எதிர்ப்பு எழுந்தது. 
 
அனைத்து தரப்பிலும் இருந்து பா.ஜனதா அரசு எதிர்ப்பை சந்தித்த நிலையில் மாநில இஸ்லாமிய அமைச்சர் இதனை நியாயப்படுத்தினார். 

“புதிய நிறத்தை பூசியதால் என்ன பிரச்சனை என்றுதான் என்னால் அறிந்துக்கொள்ள முடியவில்லை. காவி நிறம் தேசத்திற்கு எதிரானது? காவி நிறம் பிரகாசம் மற்றும் திறனுக்கு சின்னமானது,” என்று சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி மக்சிங் ராசா விளக்கம் கொடுத்தார். பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்ததும் உத்தரபிரதேச மாநில அரசு 24 மணி நேரங்களில் சுவரின் நிறத்தை வெள்ளையாக்கியது. இதற்கிடையே இவ்விவகாரம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஹஜ் அலுவலகத்திற்கு வெளியே சுற்று சுவரில் காவி வண்ணம் பூசப்பட்டது மற்றும் மீண்டும் வெள்ளை நிற வண்ணம் பூசப்பட்டது தொடர்பாக விளக்கம் கோரி கமிட்டியின் செயலாளர் ஆர்பி சிங்கிற்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டது என உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்தது. ஹஜ் அலுவலகத்திற்கு வண்ணம் பூசுவதற்கு பின்பற்றப்படும் விதிமுறைகள் என்ன? முதலில் யாருடைய உத்தரவின் கீழ் ஹஜ் அலுவலகத்திற்கு காவி வண்ணம் பூசப்பட்டது? காவி வண்ணம் பூசப்பட்ட பின்னர் என்ன சூழ்நிலையில் மீண்டும் நிறம் மாற்றப்பட்டது? அப்போது யார் உத்தரவிட்டது? இரண்டாவது பூசப்பட்ட நிறத்திற்கான ஆன செலவிற்கு யார் பொறுப்பு? என கேள்விகள் அடங்கிய நோட்டீஸை உத்தரபிரதேச அரசு ஹஜ் கமிட்டியின் செயலாளருக்கு விடுத்தது.

இந்நிலையில் ஹஜ் கமிட்டியின் செயலாளர் ஆர்பி சிங் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

Next Story