ஜல்லிக்கட்டு: தமிழக அரசின் சட்டத்துக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்


ஜல்லிக்கட்டு: தமிழக அரசின்  சட்டத்துக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்
x
தினத்தந்தி 3 Feb 2018 12:15 AM GMT (Updated: 2 Feb 2018 9:28 PM GMT)

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு பிறப்பித்த சட்டத்துக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி, 

தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில், மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் செய்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி 23-ந் தேதி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு, அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

இதனால் தமிழகத்தில் கடந்த ஆண்டு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த ஆண்டும் நடைபெற்று வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடத்தும் வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய விலங்குகள் நல அமைப்பின் (பீட்டா) சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தமிழக அரசின் சட்டத்தை தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் இந்த சட்டம் ஜல்லிக்கட்டை தடை செய்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அமைந்து இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்ததோடு, இந்த மனுவை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் கடந்த டிசம்பர் 12-ந் தேதி அறிவித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

விலங்குகள் நல அமைப்பின் மனுவை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான ரோகின்டன் பாலி நாரிமன் நேற்று தீர்ப்பை அறிவித்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் கையெழுத்திட்ட அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

5 கேள்விகள்

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் எழும் சில கேள்விகளுக்கு விடை காண வேண்டி இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும். அரசியல் சாசன அமர்வு, மனுக்களில் எழுப்பப்பட்ட கேள்விகளை தவிர அரசியல் சட்டத்தின்படி கீழ்க்கண்ட 5 கேள்விகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளும்.

1. ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள திருத்த சட்டம், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் மிருக வதையை தடை செய்யும் வகையில் அமைந்து உள்ளதா?

2. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காப்பதற்காக தமிழ்நாடு அரசு இந்த திருத்த சட்டத்தை பிறப்பித்து உள்ளதாக தெரிவித்து உள்ளது. இந்த திருத்த சட்டம் அரசியல் சாசன பிரிவு 29-ன் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பண்பாட்டு உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அமைந்து இருக்கிறதா?

காளை மாடுகளின் நலன்

3. தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள திருத்த சட்டம், அரசியல் சட்ட பிரிவு 48-க்கு தொடர்புடையதாகவும், நாட்டு இன காளை மாடுகளின் நலனை பாதுகாக்கும் வகையிலும் அமைந்து உள்ளதா?

4. தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள திருத்த சட்டம், அரசியல் சட்ட பிரிவுகள் 51ஏ(ஜி) மற்றும் 51ஏ(ஹெச்) ஆகியவற்றுக்கு எதிராக உள்ளதா? அப்படி இருப்பின் அது அரசியல் சட்டப்பிரிவு 14 மற்றும் 21 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளதா?

5. தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள திருத்த சட்டம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஏ.நாகராஜா என்பவர் தொடுத்த வழக்கின் மீது சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 16-ந் தேதியன்று வழங்கிய தீர்ப்புக்கு நேரடியாக முரண்படும் வகையில் அமைந்துள்ளதா? மற்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள குறைகளை நீக்க தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள திருத்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளதா?

நீதிபதிகள்

மேற்கண்ட 5 கேள்விகளின் அடிப்படையில் அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். இந்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெறும் நீதிபதிகள் குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story