பிரதமர் மோடியின் சொந்த ஊரில் தலித் வன்கொடுமை காரணமாக பள்ளி மதிய உணவு மேலாளர் தற்கொலை


பிரதமர் மோடியின் சொந்த ஊரில் தலித் வன்கொடுமை காரணமாக பள்ளி மதிய உணவு மேலாளர் தற்கொலை
x
தினத்தந்தி 8 Feb 2018 11:55 AM GMT (Updated: 8 Feb 2018 1:35 PM GMT)

பிரதமர் மோடியின் சொந்த ஊரில் தலித் வன்கொடுமை காரணமாக பள்ளி மதிய உணவு மேலாளர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் வாத்நகரை சேர்ந்த மகேஷ் சவுகான் , ஷேக்பூர் தொடக்கப் பள்ளியில் மதிய உணவு மேலாளராக பணியாற்றி வந்தார். மதிய உணவு திட்டத்தில் பணியாற்றி வந்த அவர்  அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக மூன்று பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுகானின் மனைவி இலாபென் (வயது 35). இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.  

கணவரின் தற்கொலைக்கு காரணம் ஷேக்பூர் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள்தான் எனவும் அவர்களை உடனடியாக கைது செய்யும்படியும் வத்நாகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்திய தண்டனை சட்டம் மற்றும் எஸ்டி/எஸ்சி பிரிவினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சவுகான் தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றிய அவருடைய தற்கொலை கடிதத்தை போலீஸார் கண்டுபிடித்து உள்ளனர். வாத்நகர் போலீஸ் தெரிவித்து உள்ள தகவலில், “வாத்நகருக்கு அருகே உள்ள ஷேக்பூர் கிராமத்தில் மதிய உணவு மேலாளராக பணியாற்றிய மகேஷ் சவுகான் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளார். 

தற்கொலைக்கு தூண்டியவர்கள் பள்ளி ஆசிரியர்கள் மோமின் ஹசன் அப்பாஸ்பாய், விநோத் பிரஜாபதி மற்றும் அமாஜி தாகூர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.எல்.காராதி பேசுகையில், “புகாரின்படி, மூன்று ஆசிரியர்களும் தொடர்ச்சியாக மகேஷ் சவுகானை துன்புறுத்தும் செயலை கொண்டிருந்து உள்ளனர். அவர்களுடைய செலவிற்கு மகேஷ் சவுகானை பணம் செலுத்தவும் வற்புறுத்தி உள்ளனர். மதிய உணவு திட்டம் தொடர்பான பதிவேட்டில் கையெழுத்து விவகாரம் தொடர்பாக மிரட்டி தங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி உள்ளனர்.  குற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது, விசாரணை நடைபெற்று வருகிறது,” என கூறி உள்ளார். 
 
செவ்வாய் கிழமை மாலையில் மகேஷ் சவுகானின் உடல் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. மகேஷ் சவுகான் தனக்கு நேர்ந்த கொடுமை மற்றும் தொல்லை தொடர்பாக தற்கொலை கடிதம் எழுதி, தன்னுடைய மகள் பள்ளி கொண்டு செல்லும் பையில் வைத்து உள்ளார் என தெரியவந்து உள்ளது. மூன்று பேரையும் கைது செய்யும் வரையில் சடலத்தை வாங்க மாட்டோம் என மகேஷ் சவுகான் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். 

அப்பகுதியை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் கவுசிக் பார்மெர் பேசுகையில், “சடலம் வாத்நகர் மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் சடலத்தை பெற மாட்டோம் என குடும்பத்தினர் தெரிவித்துவிட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மகேஷ் சவுகானின் குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். அவருடைய மனைவி இலாபென்னிற்கு அரசு நிர்வாகத்தில் பணி வழங்க வேண்டும்,” என வலியுறுத்தி உள்ளார். 
  
மகேஷ் சவுகான் கடந்த ஒரு வருடமாக ரூ.1,600 மாத ஊதியம் பெற்று பணியாற்றி வந்து உள்ளார், அதே பள்ளிக்கூடத்தில் சமையல்காரராக அவருடைய மனைவி இலாபென் பணியாற்றி வந்து உள்ளார். இந்நிலையில் ‘ஸ்நாக்ஸ்’ தின்று அவரிடம் காசு கொடுக்க கட்டாயப்படுத்தி உள்ளனர் மூன்று ஆசிரியர்களும். இவ்விவகாரத்தை முக்கியமானதாக கவனத்தில் எடுத்துக் கொண்ட குஜராத் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் இஷ்வார் பார்மர் இந்த சம்பவத்தின்மீது விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.  அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து உள்ளார். 

Next Story