எல்லையில் ராணுவ வீரர்கள் உயிரிழக்கிறார்கள், அரசு பக்கோடா பற்றி பேசுகிறது சிவசேனா விமர்சனம்


எல்லையில் ராணுவ வீரர்கள் உயிரிழக்கிறார்கள், அரசு பக்கோடா பற்றி பேசுகிறது சிவசேனா விமர்சனம்
x
தினத்தந்தி 8 Feb 2018 2:30 PM GMT (Updated: 8 Feb 2018 2:30 PM GMT)

எல்லையில் ராணுவ வீரர்கள் உயிரிழந்து வருகிறார்கள், ஆனால் அரசு பக்கோடா பற்றி பேசுகிறது என சிவசேனா விமர்சனம் செய்து உள்ளது.



மும்பை, 

முக்கிய பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை மத்திய அரசு திசை திருப்புவதாக அரசு பக்கோடா விவகாரத்தை கிளப்பி வருகிறது எனவும் சிவசேனா விமர்சித்தது.

 பக்கோடா விற்பனை செய்வதும் ஒரு விதத்தில் வேலைவாய்ப்பு தான் என்றும், இதனையும் வேலைவாய்ப்பு உருவாக்க வெளிச்சத்தில் தான் பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கு மத்தியில், பக்கோடா பிரச்சினை குறித்து டெல்லி மேல்–சபையில் பேசிய பா.ஜனதா தலைவர் அமித்ஷா, வேலையில்லாமல் இருப்பதை காட்டிலும், பக்கோடா விற்பனை செய்வது சிறந்தது என்று கருத்து தெரிவித்தார். இதனையடுத்து பாரதீய ஜனதாவிற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பக்கோடா போராட்டம் நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் எல்லையில் ராணுவ வீரர்கள் உயிரிழந்து வருகிறார்கள், ஆனால் அரசு பக்கோடா பற்றி பேசுகிறது என சிவசேனா விமர்சனம் செய்து உள்ளது. சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில், இந்திராகாந்தியை பாராட்டியும், பாரதீய ஜனதா அரசை விமர்சித்தும் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட காங்கிரசுக்கு தைரியம் இல்லை. இருப்பினும், இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானை தோற்கடித்து அந்நாட்டை பிளவுபடுத்தினார். 

பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்த போதிலும், தன்னுடைய துணிச்சலை இந்திராகாந்தி வெளிப்படுத்தினார்.

இன்றைக்கு அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பிரதமர் மோடியின் இசைக்கு ஏற்ப நடனம் ஆடுவதாகவும், சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாகவும் பரவலாக பேசப்படுகிறது. பாகிஸ்தானுக்கு அளித்து வந்த நிதியுதவிக்கு எதிராக அமெரிக்கா பேசியபோது, டெல்லி மகிழ்ச்சி அடைந்தது. அதேவேளையில், பாகிஸ்தானும், அந்நாட்டு பயங்கரவாதிகளும் ஒவ்வொரு நாளும் இந்தியாவுக்கு சிரமம் அளித்து வருகின்றனர். முக்கிய பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக கற்பனையான பக்கோடாக்கள் வறுக்கப்படுகின்றன என சிவசேனா விமர்சனம் செய்து உள்ளது.

மேலும் காஷ்மீர் விவகாரத்தில் பாரதீய ஜனதா முந்தைய காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தது, இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக இப்போது பாரதீய ஜனதா அரசு எடுத்த ஸ்திரமான நடவடிக்கை என்ன? என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது. 

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தி பயங்கரவாதியை தப்பிக்க செய்து உள்ளனர். ஜம்மு காஷ்மீர் அரசு தோல்வி அடைந்துவிட்டது. வீரமரணம் அடைந்த வீரர்கள் சடலத்துடன் பயங்கரவாதிகள் நடனம் ஆடுகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் எல்லையில் 100 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது, 15 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். இப்படியொரு இக்கட்டான நிலையில் அவர்கள் (பாரதீய ஜனதா) பக்கோடா பற்றி விவாதிக்கிறார்கள் என்று சிவசேனா சாடிஉள்ளது.

Next Story