பஸ்சில் பயணம் செய்த போது ஆபாச செய்கையில் ஈடுபட்டவரை வீடியோ எடுத்து வெளியிட்ட மாணவி


பஸ்சில் பயணம் செய்த போது ஆபாச செய்கையில் ஈடுபட்டவரை வீடியோ எடுத்து வெளியிட்ட மாணவி
x
தினத்தந்தி 12 Feb 2018 11:49 AM GMT (Updated: 12 Feb 2018 11:49 AM GMT)

பஸ்சில் பயணம் செய்த போது ஆபாச செய்கையில் ஈடுபட்டவரை வீடியோ எடுத்து வெளியிட்ட மாணவி, ‘யாரும் உதவிக்கு வரவில்லை’ என குற்றம் சாட்டிஉள்ளார்.


புதுடெல்லி,


பாதிக்கப்பட்ட மாணவி இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். 

பொது இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைகளை எதிர்க்கொள்ளும் சம்பவமானது தொடர்ச்சியாக நடந்த வண்ணமே உள்ளது. டெல்லியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. பயணிகள் அதிகமாக இருந்த பஸ்சில் பயணம் செய்த மாணவிக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமான சம்பவம் நேரிட்டு உள்ளது. பஸ்சில் டெல்லி பல்கலைக்கழக மாணவிக்கு அருகே இருந்த நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் பொதுமக்கள் இருக்கும் பஸ்சில் அநாகரிகமாக ஆபாச செய்கையில் ஈடுபட்டு உள்ளார். இச்செயலை பாதிக்கப்பட்ட மாணவி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். 

இவ்விவகாரம் தொடர்பாக புகார் தெரிவிக்க சென்ற போது போலீசார் 6 மணி நேரங்களுக்கு மேலாக காக்க வைத்ததாகவும் குற்றம் சாட்டிஉள்ளார். தன்னுடைய ஒழுக்கக்கேடான செயலை மறைக்கும் விதமாக பேக் ஒன்றை வைத்துக் கொண்டு, மாணவிக்கு முன்னதாக அநாகரிகமாக செயல்பட்டு உள்ளான் என்பதை வீடியோ காட்டுகிறது. அவர் தன்னை தொட முயற்சி செய்தாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்து உள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி இதுதொடர்பாக பேசுகையில், “என் அருகே இருந்த அவர் என்னிடம் ஏதோ செய்ய முயற்சி செய்ததாக உணர்ந்தேன், அவர் தன்னுடைய முழங்கையால் என்னுடைய இடுப்பை தொடுவதற்கு முயற்சி செய்தார். அவருடைய அநாகரிகமான செயலை ஆவணமாக்க முயற்சி செய்தேன், என்னுடைய போனில் வீடியோ எடுத்தேன், அவன் ஆபாச செய்கையில் ஈடுபட்டு இருந்தான்,” என கூறிஉள்ளார். இதனை உடன் பயணம் செய்த யாரும் கண்டுக்கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் குற்றம் சாட்டிஉள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக டெல்லி விஹார் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் கொடுத்து உள்ள பேட்டியில்,  “பஸ்சில் அதிகமான கூட்டம் இருந்தபோது பயணம் செய்தேன், எனக்கு அருகே இருந்தவன் ஆபாச செய்கையில் ஈடுபட்டான். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, அதனையடுத்துதான் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டேன். இதுபோன்ற பாலியல் தொல்லை தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வு கொள்ளவே இதனை வெளியிட்டேன். இதனை பொதுமக்கள் ஒரு பாலியல் தொல்லையாக நினைப்பது கிடையாது,” என குறிப்பிட்டு உள்ளார். குற்றவாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

என்னுடைய பெற்றோர் போலீசுக்கு செல்ல தயக்கம் காட்டிய நிலையில், “வீடியோவை பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், டெல்லி போலீஸ் மற்றும் பிற அதிகாரிகளை ‘டேக்கிங்’ செய்து வெளியிட்டேன்,” என கூறிஉள்ளார். 


Next Story