தேவைப்பட்டால் பாரிக்கர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவார் -பாரதீய ஜனதா


தேவைப்பட்டால் பாரிக்கர்  மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவார் -பாரதீய ஜனதா
x
தினத்தந்தி 20 Feb 2018 5:48 AM GMT (Updated: 20 Feb 2018 5:48 AM GMT)

கோவா முதல்வருக்கு தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவார் என பா.ஜ.க. எம்.எல்.ஏ மைக்கேல் லாபோ கூறி உள்ளார். #ManoharParrikar #Tamilnews

பனாஜி

கணைய சுழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15-ம் தேதி மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கணையத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக முதல்வருக்கு  அளிக்கப்படும் சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்துள்ளது. அவரது உடல் நலம் நல்ல முன்னேற்ற நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் முதல்வரின் உடல் நலம் குறித்து சில ஊடகங்கள் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறான செய்கையாகும்” என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து கோவா சட்டமன்ற துணை சபாநாயகரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் லாபோ சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

 ‘மும்பை லீலாவதி மருத்துவமனையில் முதல்வருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எங்களால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வோம். தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவார்’ என்றார் லாபோ.

Next Story