ஜனாதிபதி மாளிகைக்கு வந்த கனடா பிரதமரை கட்டிப்பிடித்து வரவேற்ற மோடி


ஜனாதிபதி மாளிகைக்கு வந்த கனடா பிரதமரை கட்டிப்பிடித்து வரவேற்ற மோடி
x
தினத்தந்தி 23 Feb 2018 7:26 AM GMT (Updated: 23 Feb 2018 8:57 AM GMT)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று ஜனாதிபதி மாளிகை வந்தபோது பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்றார். #JustinTrudeau #PMModi

புதுடெல்லி

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். அதன்பின், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார். 

அதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி திரும்பிய கனடா பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று காலை ஜனாதிபதி மாளிகை வந்தார். காரில் இருந்து இறங்கிய அவரை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்றார். பின்னர் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்து இருக்கிறார். 8 நாள் பயணத்தில் இவ்வளவு நாட்கள் கழித்து இப்போதுதான் அவர் இந்திய பிரதமரால் வரவேற்கப்பட்டு இருக்கிறார்.

கனடா பிரதமரை மத்திய அரசு புறக்கணிப்பதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளித்ததும், மோடி நேரில் சென்று வரவேற்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு பிறகு கனடா பிரதமர், டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜையும் சந்தித்து பேசினார். 

இன்று இவர்கள் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். காலநிலை மாற்றம், ஸ்பேஸ் தொழில்நுட்பம், ராணுவ உதவி குறித்து பேச உள்ளனர். ஆனால் இதில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

அதேபோல் இதில் முக்கியமாக சீக்கியர்கள் பிரச்சனை குறித்தும் பேசப்பட இருக்கிறது. காலிஸ்தான் குறித்த இந்திய நிலைப்பாட்டை மோடி அறிவிப்பார். மேலும் சீக்கிய போராளிகளுக்கு கனடா ஆதரவு அளிப்பது  குறித்தும் மோடி பேச இருக்கிறார்.

Next Story