டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் சோதனை 21 கேமிராக்கள் பறிமுதல்


டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் சோதனை 21 கேமிராக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Feb 2018 10:57 AM GMT (Updated: 23 Feb 2018 10:57 AM GMT)

தலைமை செயலாளர் தாக்குதல் தொடர்பாக டெல்லி போலீசார் முதல் மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர் 21 கேமிராக்கள் பறிமுதல் செய்தனர். #DelhiChiefSecretary #ArvindKejriwal

 புதுடெல்லி

டெல்லி மாநில அரசின் ஆலோசனை கூட்டம் ஒன்று கடந்த 19–ந்தேதி நள்ளிரவு முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில தலைமை செயலாளர் அன்ஷூ பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலர் அன்ஷூ பிரகாஷை தாக்கியதாக தெரிகிறது. மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் தொடர்பாக, சிவில் லைன் போலீசில் தலைமை செயலாளர் புகார் செய்தார். அதன்பேரில் எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜர்வால், அமானத்துல்லா கான் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிரகாஷ் ஜர்வால் எம்.எல்.ஏ மற்றும் அமானத்துல்லா கான் எம்.எல்.ஏ. ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் இன்று இவர்கள் மீதான ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.

கெஜ்ரிவால் உதவியாளர் வி.கே ஜெயினிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று  முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்ற போலீசார் அங்கு சென்று வீடியோ மற்றும் பிற ஆதாரங்கள் சேகரித்தனர்.

குறைந்தது  21 சிசிடிவி கேமிராக்கள் பறிமுதல் செய்யப்பட்டு  உள்ளன.  வீட்டிற்குள் இருந்த 21 கேமிராக்களில் 14 கேமிராக்களே வேலைசெய்தன.  பிரகாஷ் தன்னை அடித்ததாக கூறப்படும்  அறையில் இருந்த கேமிரா வேலை  செய்யவில்லை என  போலீஸ் தரப்பில்  கூறப்பட்டு உள்ளது.

சோதனை நடந்த போது  உள்  குடியிருப்புக்குள் கெஜ்ரிவால் இருந்தார். டெல்லி காவல்துறையினரால் கேஜ்ரிவால் விசாரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Next Story