பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை


பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை
x
தினத்தந்தி 24 Feb 2018 11:45 PM GMT (Updated: 24 Feb 2018 8:16 PM GMT)

‘எப்படி வங்கிகளில் இருந்து பணம் போனது என்பதை சொல்லுங்கள்’ என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

நிரவ் மோடி உள்ளிட்டவர்களின் வங்கி மோசடிகள் விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி, தனது மவுனத்தை கலைத்தார். நிதிமுறைகேடுகளில் தொடர்பு உடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். பொதுப்பணத்தை கொள்ளையடிப்பவர்களை சகித்துக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார். ஆனால் இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிராகரித்தார்.

சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடக மாநிலத்தில் தனது 2–வது சுற்று பிரசார பயணத்தை  தொடங்கிய ராகுல் காந்தி அங்கு நேற்று ஒரு கூட்டத்தில் பேசினார்.

நிரவ் மோடி ரூ.11 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்து உள்ளதாக கூறப்பட்டு வந்த வேளையில் ராகுல் காந்தி ரூ.22 ஆயிரம் கோடி என கூறினார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘ இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ.22 ஆயிரம் கோடியை பெற்றுக் கொண்டு, நிரவ் மோடி ஓடி விட்டார். பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். நடவடிக்கை எடுப்பீர்களா? முதலில் உங்கள் அரசின் பார்வையில் இருந்து அவர் எப்படி ரூ.22 ஆயிரம் கோடியை இந்திய வங்கிகளில் இருந்து பெற்றுச் சென்றார் என்பதை விளக்கமாக சொல்லுங்கள்’’ என்றார்.

மேலும், ‘‘பிரதமர் மோடியும், நிதி மந்திரி அருண் ஜெட்லியும் இதை ஏன் அனுமதித்தார்கள்?’’ என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

Next Story