ரூ. 70 கோடி மதிப்பிலான நிரவ் மோடியின் 4 சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது


ரூ. 70 கோடி மதிப்பிலான நிரவ் மோடியின் 4 சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது
x
தினத்தந்தி 28 Feb 2018 4:04 PM GMT (Updated: 28 Feb 2018 4:04 PM GMT)

ரூ. 70 கோடி மதிப்பிலான நிரவ் மோடியின் 4 சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்து உள்ளது. #NiravModi #PNBfraud


புதுடெல்லி,


மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி நாட்டின் 2–வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் வாங்கிய ரூ.12,723 கோடி கடனை திரும்பச் செலுத்தவில்லை. இந்த ஊழல் அம்பலத்துக்கு வருவதற்கு முன்பே அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகிறது. மோசடியை விசாரிக்கும் சிபிஐ அவரை விசாரணைக்கு அழைத்து இ–மெயில் மூலம்  சம்மன் அனுப்பியது. ஆனால் வெளிநாட்டில் தனக்கு வியாபாரத்தை கவனிக்க வேண்டி உள்ளதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என அவர் பதில் அளித்து உள்ளார்.

இதையடுத்து அவர் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராகியே தீர வேண்டும் என்று சி.பி.ஐ. மீண்டும் வலியுறுத்தி உள்ளது. அவர் தான் தங்கி உள்ள நாட்டில் இருக்கிற இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டால், அவரது இந்திய பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே வங்கி மோசடி தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை முகமைகள் அதிரடி சோதனையையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இப்போது வருமான வரித்துறை ரூ. 70 கோடி மதிப்பிலான நிரவ் மோடியின் 4 சொத்துக்களை பறிமுதல் செய்து உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷியின் நகர்வை தடுக்கும் வகையில் அவர்களுக்கு எதிராக லுக்-அவுட் சுற்றரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story