நான்கு நாட்களுக்கு பிறகு தெற்கு காஷ்மீரில் ரயில்சேவை மீண்டும் துவக்கம்


நான்கு நாட்களுக்கு பிறகு தெற்கு காஷ்மீரில் ரயில்சேவை மீண்டும் துவக்கம்
x
தினத்தந்தி 9 March 2018 4:52 AM GMT (Updated: 9 March 2018 4:52 AM GMT)

காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 4 தினங்களாக நிறுத்தப்பட்டு இருந்த ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. திங்கள் கிழமை வரை நீடித்த இந்த சண்டையின் முடிவில் 2 லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் உட்பட 6 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை கண்டித்து பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த நான்கு தினங்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில்,  காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதட்டம் ஓரளவு தணிந்துள்ளதையடுத்து இன்று மீண்டும் ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்- அனந்தநாக் -காசிகண்ட் ஆகிய இடங்கள் வழியாக ஜம்மு பிராந்தியத்தில் உள்ள பனிஹால் பகுதிக்கு செல்லும் ரயில் சேவை வழக்கம் போல் இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், மத்திய காஷ்மீரில் இருந்து வடக்கு பாரமுல்லா வரை செல்லும் ரயில் சேவையும் மீண்டும் துவங்கியுள்ளதாக தெரிவித்தனர். 

காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ரயில்சேவை மீண்டும் துவக்கப்பட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் பாதுகாப்பு கருதியும் ரயில்வே சொத்துக்களின் பாதுகாப்பு  கருதியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ரயில்சேவை கடந்த 4 தினங்களாக நிறுத்தப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர். 

Next Story