கர்நாடகம் தனிக்கொடி வெளியீடு; சட்டம் அங்கீகாரம் அளிக்கிறதா? மத்திய அரசு தகவல்கள் என்ன சொல்கிறது


கர்நாடகம் தனிக்கொடி வெளியீடு; சட்டம் அங்கீகாரம் அளிக்கிறதா? மத்திய அரசு தகவல்கள் என்ன சொல்கிறது
x
தினத்தந்தி 9 March 2018 1:26 PM GMT (Updated: 9 March 2018 6:36 PM GMT)

ஜம்மு காஷ்மீரை தவிர்த்து முதல் முறையாக கர்நாடகம் மாநிலத்திற்கான தனிக்கொடியை வெளியிட்டு உள்ளது. #KarnatakaFlag

புதுடெல்லி,

கர்நாடகத்திற்கு தனிக்கொடி வேண்டும் என்று கன்னட அமைப்புகள் மற்றும் மாநில மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை ஏற்று நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்திற்கு என்று தனிக்கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை முதல்–மந்திரி சித்தராமையா வெளியிட்டார். 

இதுதொடர்பாக சித்தராமையா பேசுகையில், நமக்கான தனிக்கொடிக்கு மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கி இருந்தாலும், அந்த கொடியை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தான் அங்கீகாரம் வழங்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒரு மாநில அரசு தனிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறைகள் எதுவும் இல்லை. ஆனாலும் கர்நாடகத்திற்கான தனிக்கொடிக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 

கர்நாடகத்திற்கான தனிக்கொடிக்கு அங்கீகாரம் வழங்கும் படியும் மத்திய அரசை வற்புறுத்த மாநில அரசு முடிவு செய்து உள்ளது.

தேசிய கொடிக்கு மாற்றாக, கர்நாடகத்திற்கு தனிக்கொடியை உருவாக்கவில்லை. இது நமது மாநிலத்திற்கான கொடி மட்டுமே. தேசிய கொடிக்கும், கர்நாடக கொடிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. தேசிய கொடிக்கு அவமானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் அரசுக்கு இல்லை என்றார். 

ஒரு மாநிலம் தனிக்கொடி கொண்டிருப்பது தொடர்பாக அரசியலமைப்பில் ஆதரவு அல்லது எதிர்ப்பு தொடர்பாக எந்தஒரு ஷரத்தும் கிடையாது என மத்திய அரசு அதிகாரி கூறிஉள்ளார். தன்னுடைய அடையாளத்தை வெளியே தெரிவிக்க விரும்பாத அதிகாரி, இந்திய தேசியக்கொடி சட்டத்தில், மூவர்ணக்கொடியை மட்டுமே குறிப்பிடப்படுகிறது, பிற கொடிகள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என கூறிஉள்ளார். மேலும் அவர் பேசுகையில் இந்தியா ஒரு கொடியை மட்டும் கொண்டிருக்க வேண்டும், இல்லையென்றால் நாளை குழப்பம் நேரிடும். நாளை பிற மாநிலங்களும் தனிக்கொடியை உருவாக்கும்.

பின்னர் மாவட்டங்கள் மற்றும் கிராமங்கள் தரப்பிலும் தனிக்கொடி நாடப்படும் என தெரிவித்து உள்ளார் என பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது. 

இவ்விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் பேசுகையில், கர்நாடக அரசிடம் இருந்து இதுவரையில் எங்களுக்கு எந்தஒரு முன்மொழிவும் வரவில்லை, எனவே இப்போது இவ்விவகாரம் தொடர்பாக பேசுவது முன்கூட்டியே பேசுவதாகும் என்றார். 

சட்டம் மற்றும் அரசியலமைப்பு ஷரத்துக்களின்படி முடிவு எடுக்க இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க ஒழுங்குமுறை கட்டமைப்பை கொண்டுவர வேண்டும் என மற்றொரு அதிகாரி குறிப்பிட்டு உள்ளார். பெயர் தெரிவிக்க விரும்பாத அவர் “இந்தியா ஒரே தேசம், ஒரே கொடி. எந்தஒரு மாநிலமும் தனிக்கொடியை கொண்டிருப்பதற்கு அரசியலமைப்பில் ஆதரவாக அல்லது எதிர்ப்பாக எந்தஒரு ஷரத்தும் கிடையாது,” என கூறிஉள்ளார். கர்நாடக மாநில கொடியானது அம்மாநில மக்களின் பிரதிநிதித்துவம் மட்டுமே, அரசின் பிரதிநிதித்துவம் கிடையாது. கர்நாடக மாநில அரசு கொண்டு வந்து உள்ள கொடியை குடியரசு தினவிழா மற்றும் சுதந்திர தினவிழாவில் பயன்படுத்த முடியாது, மாநிலம் தொடங்கிய நாள் போன்ற விழாக்களில் வேண்டுமென்றால் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டு உள்ளார். 

Next Story