இடதுசாரிகளுடன் வேறுபாடு உள்ளது, ஆனால் மாணிக் சர்க்காருடன் இணைந்து பணியாற்ற முடியும் - பா.ஜனதா


இடதுசாரிகளுடன் வேறுபாடு உள்ளது, ஆனால் மாணிக் சர்க்காருடன் இணைந்து பணியாற்ற முடியும் - பா.ஜனதா
x
தினத்தந்தி 9 March 2018 3:03 PM GMT (Updated: 9 March 2018 3:03 PM GMT)

இடதுசாரிகளுடன் வேறுபாடு உள்ளது, ஆனால் மாணிக் சர்க்காருடன் இணைந்து பணியாற்ற முடியும் என பா.ஜனதா கூறிஉள்ளது. #ManikSarkar #BJP


அகர்தாலா, 

திரிபுரா மாநில புதிய முதல்-மந்திரியாக பாரதீய ஜனதாவின் விப்லப் குமார் தேப் இன்று பதவியேற்றுக் கொண்டார். விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அத்வானி, ஜோஷி, திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் மிகவும் எளிமையான முதல்-மந்திரியாக இருந்த மாணிக் சர்க்கார் இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறிய அலுவலகத்தில் தங்கிஉள்ளார். எப்போதும் இல்லாத நிகழ்வாக பா.ஜனதா தலைவர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்தனர். 

அழைப்பை ஏற்ற மாணிக் சர்க்காரும் இன்று பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொண்டார். 

திரிபுராவில் பாரதீய ஜனதா கட்சி வெற்றிப்பெற்றதும் அக்கட்சியின் தொண்டர்கள் இடதுசாரி தொண்டர்களுக்கு எதிராக வன்முறையை தொடங்கினர். லெனின் சிலைகள் தகர்க்கப்பட்டது. சிலை உடைப்பிற்கு பாரதீய ஜனதாவினர் ஆதரவு கருத்தும் தெரிவித்தனர். பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் இடதுசாரிகளுடன் வேறுபாடு உள்ளது, ஆனால் மாணிக் சர்க்காருடன் இணைந்து பணியாற்ற முடியும் என பா.ஜனதா கூறிஉள்ளது. பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த ராம் மாதவ் பேசுகையில், “இடதுசாரிகளுடன் கொள்கையின் ரீதியில் பா.ஜனதா வேறுபாடுகளை கொண்டு உள்ளது. ஆனால் வளர்ச்சி என்ற நிலையை நோக்கி ஆட்சியை தொடங்கி உள்ள அரசு, மாணிக் சர்க்கார் போன்ற அனுபவம் வாய்ந்தவர்களுடன் பணியாற்ற முடியும்,” என கூறிஉள்ளார். 

திரிபுராவில் தேர்தல் வெற்றியை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான வன்முறைகளை பா.ஜனதாதான் ஊக்குவித்தது என்ற குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். 


Next Story