சசிகலாவுக்கு சலுகை சித்தராமையா மீது எடியூரப்பா பாய்ச்சல், ஜனாதிபதி ஆட்சிக்கு வலியுறுத்தல்


சசிகலாவுக்கு சலுகை சித்தராமையா மீது எடியூரப்பா பாய்ச்சல், ஜனாதிபதி ஆட்சிக்கு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 March 2018 3:18 PM GMT (Updated: 9 March 2018 3:18 PM GMT)

தண்டனை கைதி சசிகலாவுக்கு சலுகை வழங்கும்படி உத்தரவிட முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு அதிகாரம் இல்லை என்று எடியூரப்பா கூறினார். #Sasikala

பெங்களூரு, 

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா தலைவர் எடியூரப்பா, கர்நாடகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது. லோக்அயுக்தா நீதிபதி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ரவுடிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் புகார் தெரிவித்து உள்ளோம். இதுபற்றி மாநில அரசிடம் விளக்கம் கேட்பதாக அவர் எங்களிடம் உறுதியளித்து உள்ளார். கர்நாடகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத காங்கிரஸ் அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கையை கவர்னர் எடுக்க வேண்டும் என்றார். 

மேலும் பேசுகையில், சசிகலா சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். அவருக்கு சலுகைகளை வழங்கும்படி சிறைத்துறை உயர் அதிகாரிக்கு முதல்–மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை அந்த சிறைத்துறை அதிகாரியே கூறி இருக்கிறார். சிறையில் தண்டனை கைதிக்கு சலுகைகள் வழங்கும்படி உத்தரவிட முதல்–மந்திரிக்கு அதிகாரம் இல்லை. கர்நாடகத்தில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிட்டது. இதுபற்றியும் கவர்னர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிஉள்ளார் எடியூரப்பா. 

Next Story