பெங்களூரு சிறையில் சசிகலா சீருடையை அணிவது கிடையாது - பெண்கள் ஆணைய தலைவி


பெங்களூரு சிறையில் சசிகலா சீருடையை அணிவது கிடையாது - பெண்கள் ஆணைய தலைவி
x
தினத்தந்தி 11 March 2018 9:19 AM GMT (Updated: 11 March 2018 9:19 AM GMT)

பெங்களூரு சிறையில் சசிகலா சீருடையை அணிவது கிடையாது என பெண்கள் ஆணைய தலைவி கூறிஉள்ளார். #VKSasikala

பெங்களூரு, 

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறியது கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பெயரும் அடிபடுகிறது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட போது ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக வருமான வரி செலுத்தும் தனக்கு ஏசி, தொலைக் காட்சி, வீட்டு சாப்பாடு உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய சிறப்பு அறை ஒதுக்க வேண்டும் என கோரினார். ஆனால் நீதிபதி அதனை ஏற்க மறுத்து, சிறைத்துறை நிர்வாகம் அளிக்கும் வசதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். இருப்பினும் சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்கிறார், சசிகலா மற்றும் இளவரசி சிறையில் சீருடையை அணிவது கிடையாது எனவும் டிஐஜி ரூபா கூறியிருந்தார்.

இப்போது இதனை உறுதி செய்யும் வகையில் பெங்களூரு சிறையில் சசிகலா சீருடையை அணிவது கிடையாது என பெண்கள் ஆணைய தலைவி (கூடுதல் பொறுப்பு) ரேக்கா சர்மா கூறிஉள்ளார். சிறையில் சாதாண உடையில் சசிகலாவும், இளவரசியும் உள்ளார்களா? என்ற கேள்விக்கு ரேகா சர்மா “ஆம்” என பதில் அளித்தார் என இந்தியா டூடே செய்தி செய்தி வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் பேசிய போது, சசிகலா சிறையில் உயர் வகுப்பில் உள்ளார், அங்கு அவர்கள் தங்களுடைய சொந்த ஆடைகளை பயன்படுத்தலாம் என்று கூறினார்கள் என ரேகா சர்மா கூறிஉள்ளார். 

Next Story