கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்த உத்தரவு: ஆடிட்டர் குருமூர்த்தி கருத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு அதிருப்தி


கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்த உத்தரவு: ஆடிட்டர் குருமூர்த்தி கருத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு அதிருப்தி
x
தினத்தந்தி 12 March 2018 11:30 PM GMT (Updated: 12 March 2018 7:40 PM GMT)

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்த உத்தரவை குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட கருத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய 20-ந் தேதிவரை இடைக்கால தடை விதித்து கடந்த 9-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதுபற்றி ஆடிட்டரும், ‘துக்ளக்’ வார இதழ் ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டார்.

அதில், ‘இந்த உத்தரவை பிறப்பித்த 2 நீதிபதிகளில் ஒருவரான முரளிதர், ப.சிதம்பரத்தின் ஜூனியரா?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த பதிவை டெல்லி ஐகோர்ட்டுக்கு தமிழக நீதிபதிகள் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, டெல்லி ஐகோர்ட்டு தானாக முன்வந்து இப்பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.

குருமூர்த்தியின் பதிவு, ‘விஷமத்தனமான, மறைமுக அவமதிப்பு’ என்று நீதிபதிகள் முரளிதர், ஐ.எஸ்.மேத்தா ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர். குருமூர்த்தியின் ஒரு பதிவு, சுப்ரீம் கோர்ட்டை நேரடியாக தாக்குவதாகவும் அவர்கள் கூறினர். இருப்பினும், இப்போதைக்கு கோர்ட்டு அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பிக்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.



Next Story