மத்திய அரசு தென்மாநிலங்களின் வரிப்பணத்தை வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது - சந்திரபாபு நாயுடு


மத்திய அரசு தென்மாநிலங்களின் வரிப்பணத்தை வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது - சந்திரபாபு நாயுடு
x
தினத்தந்தி 13 March 2018 11:52 AM GMT (Updated: 13 March 2018 11:52 AM GMT)

மத்திய அரசு தெற்கில் கிடைக்கும் வருமானத்தை வடக்கில் செலவு செய்கிறது என சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்து உள்ளார். #ChandrababuNaidu


புதுடெல்லி,

தெலுங்குதேசம் மற்றும் பாரதீய ஜனதா இடையிலான மோதல் போக்கு தணிவதாக தெரியவில்லை. மத்திய அரசு தாக்கல் செய்த 2018-19 வருவாய் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை. மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் இடம்பெற்று இருந்தாலும் அம்மாநிலத்திற்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி நிதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து ஆந்திராவில் போராட்டம் வெடித்தது. தெலுங்கு தேசம் கட்சியும் பாரதீய ஜனதாவை விமர்சனம் செய்ய தொடங்கியது. இதன் உச்சமாக தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த மத்திய மந்திரிகள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தார்கள். விரைவில் கூட்டணியில் இருந்து விலகல் தொடர்பான அறிவிப்பு தெலுங்குதேசம் கட்சியின் சார்பில் வரலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து மத்திய அரசு மீது மற்றொரு தாக்குதல் தொடுக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு தென் மாநிலங்களின் வரியை வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது என விமர்சனம் செய்து உள்ளார். 

ஆந்திர பிரதேசம் சட்டசபையில் பேசிய சந்திரபாபு நாயுடு, மத்திய அரசுக்கு அதிகமான அளவு வருவாயை கொடுக்கும் மாநிலங்களாக தென் இந்திய மாநிலங்கள் உள்ளது, ஆனால் வடமாநிலங்களின் வளர்சிக்கு மட்டுமே அவை பயன்படுத்தப்படுகிறது,” என்றார். மேலும் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடினார். ஆந்திர மாநில பிரிவின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தொடர்ந்து ஆந்திர பிரதேசம் புறக்கணிக்கப்படுகிறது என்றார். 

“ஆந்திர பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி கிடையாதா? ஏன் இந்த பாகுபாடு. தொழில்துறை வரி சலுகைகள் மற்றும் ஜிஎஸ்டி ரிபண்ட் பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் நிலையில், ஆந்திராவிற்கு மட்டும் அது ஏன் கிடையாது?” என கேள்வியை எழுப்பிய சந்திரபாபு நாயுடு, இதில் மத்திய அரசின் பணம் மற்றும் மாநில அரசின் பணம் என்றெல்லாம் கிடையாது. வருமானம் அனைத்தும் இந்திய மக்களுடையது என்றார். சட்டசபையில் பேசிய அவர் மத்திய அரசின் மீது நேரடியான எந்தஒரு தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் காங்கிரஸ் ஆட்சியின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் பா.ஜனதா அரசால் நிறைவேற்றப்படவில்லை என்பதை பட்டியலிட்டார். 

அருண் ஜெட்லியை சாடிய சந்திரபாபு நாயுடு “மக்களின் உணர்ச்சிக்காக சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என அருண் ஜெட்லி கூறிஉள்ளார். உணர்ச்சியின் அடிப்படையில் மாநிலத்தை பிரிக்க முடியும்போது, அதே உணர்ச்சியின் அடிப்படையில் ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது?,” என கேள்வியை எழுப்பி உள்ளார். சிறப்பு நிதி பெறுவதற்கு தேவையான ஆவணங்களை தெலுங்கு தேசம்  அரசு சமர்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரித்த சந்திரபாபு நாயுடு, மத்திய அரசு தருவதாக வாக்குறுதி அளித்த நிதியை மட்டுமே கேட்கிறோம், கூடுதலாக கேட்கவில்லை என பதில் அளித்து உள்ளார். 

Next Story