உத்தரபிரதேசம், பீகார் இடைத்தேர்தல் 3 எம்.பி. தொகுதியிலும் பா.ஜனதா தோல்வி


உத்தரபிரதேசம், பீகார் இடைத்தேர்தல் 3 எம்.பி. தொகுதியிலும் பா.ஜனதா தோல்வி
x
தினத்தந்தி 15 March 2018 12:00 AM GMT (Updated: 14 March 2018 10:48 PM GMT)

உத்தரபிரதேசம், பீகாரில் 3 எம்.பி. தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தது.

புதுடெல்லி, 

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. அந்த கட்சியின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரி ஆகவும், கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

இதற்காக அவர்கள் மாநில சட்ட மேல்சபை உறுப்பினர்களாக தேர்வு ஆகினர்.

உடனே யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதி எம்.பி., பதவியையும், கேசவ் பிரசாத் மவுரியா புல்பூர் எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்ததால், அவ்விரு தொகுதிகளும் காலியாகின.

பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான முகமது தஸ்லிமுதீன் மரணம் அடைந்ததால் அவரது அராரியா தொகுதி காலியானது.

இந்த 3 தொகுதிகளுக்கும் கடந்த 11-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

கோரக்பூர் தொகுதியில் 43 சதவீத ஓட்டுகளும், புல்பூர் தொகுதியில் 37.39 சதவீத ஓட்டுகளும், அராரியா தொகுதியில் 55.77 சதவீத ஓட்டுகளும் பதிவாயின.

ஒரே நேரத்தில் 3 எம்.பி. தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல்கள், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன.

3 எம்.பி. தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. தொடர்ந்து வெற்றியையே ருசித்து வந்த பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த 3 தொகுதிகளிலும் அதிர்ச்சி தோல்வி கிடைத்தது.

உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் பிரவீண் நிஷாத் வெற்றி பெற்றார். அவர் தனக்கு அடுத்தபடியாக வந்த பாரதீய ஜனதா வேட்பாளர் உபேந்திரதத் சுக்லாவை 21 ஆயிரத்து 961 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 5 முறை எம்.பி.யாக இருந்து வந்த கோரக்பூர் தொகுதி, பாரதீய ஜனதாவின் கோட்டை என கருதப்பட்டு வந்தது. அங்கு சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்று இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

புல்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் நாகேந்திரபிரதாப் சிங் பட்டேல் வெற்றி பெற்றார். அவர் பாரதீய ஜனதா வேட்பாளர் கவுஷ்லேந்திர சிங் பட்டேலை விட 59 ஆயிரத்து 460 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி கண்டார்.

இந்த தொகுதி நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

பீகாரின் அராரியா எம்.பி. தொகுதியை ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி தக்க வைத்தது. அதன் வேட்பாளர் சர்பராஸ் ஆலம், தனக்கு அடுத்தபடியாக வந்த பாரதீய ஜனதா வேட்பாளர் பிரதீப் குமார் சிங்கை 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்றார்.

பீகார் மாநிலத்தில் ஜெகனாபாத் தொகுதி எம்.எல்.ஏ., முந்திரிகா சிங் (ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி), பாபுவா தொகுதி எம்.எல்.ஏ., ஆனந்த் பூஷண் பாண்டே (பாரதீய ஜனதா) ஆகியோர் மரணம் அடைந்ததால், அவ்விரு தொகுதிகளுக்கும் 11-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

ஜெகனாபாத் சட்டசபை தொகுதியில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சி வேட்பாளர் சுதய் யாதவ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதளம் கட்சி வேட்பாளர் அபிராம் சர்மாவைவிட 35 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

பாபுவா சட்டசபை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ரிங்கி ராணி பாண்டே ஆறுதல் வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் ஷாம்பு சிங் பட்டேலை 14 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

உத்தரபிரதேசத்தில் 2 தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. அந்த கட்சி சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து வெற்றியை ருசி பார்த்து வந்ததால், பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று விடலாம் என அதீத நம்பிக்கை கொண்டிருந்தது.

இதெல்லாம், சமாஜ்வாடி கட்சியின் வெற்றிக்கு காரணங்களாக அமைந்தன.

Next Story