இந்தியாவின் ஜிஎஸ்டி வரி மிகவும் சிக்கலானது - உலக வங்கி


இந்தியாவின் ஜிஎஸ்டி வரி  மிகவும் சிக்கலானது -  உலக வங்கி
x
தினத்தந்தி 16 March 2018 9:16 AM GMT (Updated: 16 March 2018 9:16 AM GMT)

உலகில் அதிகபட்ச வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. #GST

நாடு முழுதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலானது. மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் மறைமுக வரி விகிதத்தை முறைப்படுத்தி நாடு முழுதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் பொருட்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது.

0 சதவீதம் , 5 சதவீதம்  , 12சதவீதம்  , 18 சதவீதம்  , 28 சதவீதம்   என 5 விதமான ஜிஎஸ்டி வரி கட்டமைப்பு இந்தியாவில் உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிக்கும் 115 நாடுகளில், அதிகமான வரி கட்டமைப்பு விதிக்கும் நாடு இந்தியா தான். 

ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் போதும் வரி விகிதங்கள் குறைக்கப்படுவதோடு, பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. தெளிவான வரி விதிப்பாக இல்லாமல், பல சிக்கல்கள் நிறைந்ததாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மாநிலங்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் பெட்ரோலிய பொருட்கள், மதுபானம் ஆகியவை ஜிஎஸ்டி வரிவரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வந்தால், பெட்ரோலிய பொருட்களின் விலை குறையும் என்பதால், அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு செவிசாய்ப்பதாக தெரியவில்லை.

ஜிஎஸ்டி வரிவிதிப்பால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தடை பட்டதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோல் ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரியை 28 சதவீத்திலிருந்து 18 சதவீதமாக  குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிக்கும் 115 நாடுகளில், இந்தியா, பாகிஸ்தான், இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகள் மட்டுமே பல கட்டமைப்புகளாக வரி விதிக்கின்றன. அதிலும் இந்தியா, அதிகபட்சமாக 5 விதமான வரி கட்டமைப்புகளை பின்பற்றுகிறது. இதனால் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.

உலகில் அதிகபட்ச வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

Next Story