நாடாளுமன்றத்தில் மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் : தெலுங்கு தேசம் இன்று கொண்டு வருகிறது


நாடாளுமன்றத்தில் மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் : தெலுங்கு தேசம் இன்று கொண்டு வருகிறது
x
தினத்தந்தி 18 March 2018 9:03 PM GMT (Updated: 18 March 2018 9:03 PM GMT)

நாடாளுமன்றத்தில் மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் இன்று (திங்கட்கிழமை) கொண்டு வருகிறது.

புதுடெல்லி,

நம்பிக்கை இல்லா தீர்மானம்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சினையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்மையில் விலகிய தெலுங்கு தேசம், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை காலை நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் இது தொடர்பாக நோட்டீசும் அளித்தது. (இந்த தீர்மானம் கொண்டு வருவதற்கு குறைந்த பட்சம் 50 எம்.பி.க்களின் ஆதரவு தேவை)

ஆனால், அன்று சபையில் காவிரி வேளாண்மை வாரியம் அமைக்கக் கோரி அ.தி.மு.க. எம்.பி.க்களும், முஸ்லிம்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தெலுங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் 50 எம்.பி.க்களின் தலைகளை கணக்கிட முடியவில்லை என்று கூறி சபாநாயகர் சபையை 19-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். இதனால் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெலுங்கு தேசம் அறிவித்தது.

எதிர்க்கட்சிகள் ஆதரவு

நாடாளுமன்றத்தின் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 5-ந்தேதி தொடங்கி இதுவரை 10 நாட்கள் நடந்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சில மணிநேரம் கூட நடைபெறாமல் இரு அவைகளும் முடங்கின.

இந்தநிலையில் 2 நாள் விடுமுறைக்கு பின்பு இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த 50 எம்.பி.க்களின் கையெழுத்தை பெற்று தெலுங்கு தேசம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வருகிறது.

இதேபோல் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சபாநாயகர் அனுமதி மறுத்தால்...

அதேநேரம் ஏற்கனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு அது எடுத்துக் கொள்ளப்பட முடியாத சூழ்நிலையில், இனி 6 மாதத்துக்கு பிறகுதான் அடுத்த தீர்மானத்தை கொண்டு வர முடியும் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

இத்தீர்மானத்தை எடுத்துக் கொள்ள சபாநாயகர் இன்று அனுமதி மறுத்தால் எதிர்க்கட்சிகள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட்டு இரு அவைகளையும் முடக்கும் சூழலை உருவாக்கலாம் என்று கூறப் படுகிறது.



Next Story