4-வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு


4-வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு
x
தினத்தந்தி 19 March 2018 8:18 AM GMT (Updated: 19 March 2018 8:17 PM GMT)

4-வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ராஞ்சி,

பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்ட 4-வது கால்நடை தீவன ஊழல் வழக்கிலும் அவர் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் கடந்த 1980, 90-களில் நடந்த கால்நடை தீவன ஊழல் விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ஊழல் தொடர்பாக மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மற்றொரு முன்னாள் முதல்-மந்திரி ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் 3 வழக்குகளின் விசாரணை முடிந்து ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்டன. இந்த வழக்குகளில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவுக்கு மொத்தம் 13½ ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

எனவே ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட அவர், தற்போது உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கால்நடை தீவன ஊழல் தொடர்பான 4-வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ், ஜெகநாத் மிஸ்ரா உள்பட 31 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. 1990-களில் தும்கா கருவூலத்தில் இருந்து முறைகேடாக ரூ.3.13 கோடி பெற்றது தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் லாலு பிரசாத் யாதவ் உள்பட 19 பேர் குற்றவாளி என நீதிபதி சிவபால் சிங் தீர்ப்பு அளித்தார். ஜெகநாத் மிஸ்ரா உள்பட 12 பேர் விடுவிக்கப்பட்டனர்.

லாலு பிரசாத் உள்பட குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் தண்டனைக்கான வாதம் நாளை (புதன்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெறும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். அதன் பிறகே தண்டனை பற்றிய விவரம் அறிவிக்கப்படும்.

லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே 3 வழக்குகளில் தண்டனை பெற்று இருக்கும் நிலையில் 4-வது வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இருப்பது ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story