நம்பிக்கையில்லா தீர்மானம்; மத்திய அரசை காப்பாற்ற அதிமுக நாடகமாடுகிறது என குற்றச்சாட்டு


நம்பிக்கையில்லா தீர்மானம்; மத்திய அரசை காப்பாற்ற அதிமுக நாடகமாடுகிறது என குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 March 2018 10:22 AM GMT (Updated: 19 March 2018 6:54 PM GMT)

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்பதற்காகவே அதிமுக அவையை முடக்குகிறது என சமாஜ்வாடி குற்றம் சாட்டிஉள்ளது. #NoConfidenceMotion #AIADMK

புதுடெல்லி,

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சினையில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்மையில் தெலுங்கு தேசம் விலகியது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் முயற்சி செய்து வருகிறது. கடந்த வெள்ளியன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இதுதொடர்பாக கொடுத்த நோட்டீஸ் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இன்று மக்களவை அமளி காரணமாக முடங்கியதால் தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி தாக்கல் செய்த நோட்டீஸ் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. பிற எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளதாக ஆந்திர மாநில அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன. ஆந்திர மாநில அரசியல் கட்சிகள் சிறப்பு அந்தஸ்து கோரி போராடும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறது. இன்று அதிமுக உறுப்பினர்களின் போராட்டம் காரணமாக அவை முடங்கியது.

அதிமுக மீது குற்றச்சாட்டு

இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பிற அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டிய நிலையில் அதிமுக போராட்டம் அதனை முடக்கியதாக பார்க்கப்படுகிறது.

சமாஜ்வாடி கட்சி நேரடியாகவே குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது.  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்பதற்காகவே அதிமுக அவையை முடக்குகிறது என சமாஜ்வாடி குற்றம் சாட்டிஉள்ளது.  

சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராம்கோபால் யாதவ் பேசுகையில், மத்திய அரசின் கட்டளைக்கு ஏற்ப அதிமுக அவையை முடக்குவதுபோல் தெரிகிறது, மத்திய அரசை காப்பாற்ற அதிமுக நாடகமாடுகிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டிஉள்ளார். 

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசிக்க தயாராகவே இருந்தன, ஆனால் மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக செயல்படுவதாக தெரிகிறது. அவையை செயல்பட அதிமுக விடவில்லை என்றார் ராம்கோபால் யாதவ்.

திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில் மத்தியில் உள்ள அரசு தமிழகத்திற்கு சாதகமாக செயல்படவில்லை, மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்றார். 

நிராகரிப்பு

மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்கவே அதிமுக அவையை முடக்குகிறது என்ற குற்றச்சாட்டை அக்கட்சி நிராகரித்து உள்ளது. 

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடிக்க மத்திய அரசுக்கு துணைப்போகவில்லை என அக்கட்சியின் எம்.பி. தம்பிதுரை தெரிவித்தார். 

எங்களை பொறுத்தவரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என மத்திய அரசிடம் இருந்து வாக்குறுதி அளிக்கப்பட வேண்டும், அதுவரையில் எங்களுடைய போராட்டம் தொடரும். நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க மறைமுகமாக மத்திய அரசுக்கு ஒத்துழைக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்த பின்னர் யார் வேண்டுமென்றாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரட்டும் என அதிமுக கூறிஉள்ளது.

Next Story