2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு


2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு
x
தினத்தந்தி 19 March 2018 11:13 AM GMT (Updated: 19 March 2018 6:55 PM GMT)

பரபரப்பான 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்து உள்ளது. #2GCase


புதுடெல்லி,


மத்தியில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்தார். அப்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தின. இதில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்படும் புகார் தொடர்பான வழக்கும் அடங்கும்.

இந்த வழக்கில் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பலர் மீதும் மற்றும் சில நிறுவனங்களின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி. சைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கில் சி.பி.ஐ. சார்பில் கடந்த 2011-ம் ஆண்டும், அமலாக்கப் பிரிவின் சார்பில் 2014-ம் ஆண்டும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. 122 நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு 30 ஆயிரத்து 984 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். இந்த வழக்கில் 154 சாட்சிகளை சி.பி.ஐ. விசாரணை செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2015-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி இறுதி வாதம் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 19-ந் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

நாடு முழுவதும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் டிசம்பர் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தனிக்கோர்ட்டில் டிசம்பர் மாதம் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசு தரப்பில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதால், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கினார். தனிக்கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் அறிவித்தது. இருப்பினும் காலம் கடந்தும் மேல்முறையீடு செய்யப்படாதது தொடர்பாக கேள்விகளும் எழுந்தது. 

இப்போது 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்து உள்ளது. டெல்லி ஐகோர்டில் அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்து உள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. விரைவில் சிபிஐயும் எதிர்ப்பு தெரிவித்து மேல் முறையீடு செய்யும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story