நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது: ஆனந்த் குமார்


நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது:  ஆனந்த் குமார்
x
தினத்தந்தி 19 March 2018 1:36 PM GMT (Updated: 19 March 2018 1:36 PM GMT)

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தயாராகவுள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் கூறியுள்ளார். #AnanthKumar

புதுடெல்லி,

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தயாராகவுள்ளது. மேலும் பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் தங்களுக்கு ஆதரவு உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சினையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்மையில் விலகிய தெலுங்கு தேசம், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்தது. தெலுங்கு தேசத்துடன் இணைந்து, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தது.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”கடந்த இரண்டு வாரங்களாக மக்களவையில் அமளியில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் மற்றும் பிற கட்சி உறுப்பினர்களிடம், மோடி தலைமையிலான அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம். பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் தங்களுக்கு ஆதரவு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மூன்றில் இரண்டு பங்கு வகிக்கும் மோடி அரசு மத்திய அரசின் பெரும்பான்மைமிக்க அரசாகும்” என கூறியுள்ளார்.

முன்னதாக, மக்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று  அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story