39 இந்தியர்கள் உயிரிழப்பு: ஆதாரம் இல்லாமல் இறந்துவிட்டார்கள் என அரசு கூறமுடியாது - சுஷ்மா பதில்


39 இந்தியர்கள் உயிரிழப்பு: ஆதாரம் இல்லாமல் இறந்துவிட்டார்கள் என அரசு கூறமுடியாது - சுஷ்மா பதில்
x
தினத்தந்தி 20 March 2018 11:49 AM GMT (Updated: 20 March 2018 11:49 AM GMT)

39 இந்தியர்கள் உயிரிழப்பு விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் இறந்துவிட்டார்கள் என அரசு கூற முடியாது என சுஷ்மா பதில் கொடுத்து உள்ளார். #39Indians #SushmaSwaraj


புதுடெல்லி,


ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உடனான சண்டையின் போது 2014-ல் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியாமல் இருந்தது. பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலை என்ன ஆனது என்பது தெரியாமல் அவர்களின் உறவினர்கள் பெரும் கவலையுடன் இருந்தனர், இருப்பினும் உயிருடன் இருக்கலாம் எனவும் நம்பினார்கள். இந்நிலையில் ஐ.எஸ். கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டுவிட்டனர் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் குடும்பத்தாருக்கு போலி நம்பிக்கையை அரசு கொடுத்து உள்ளது என காங்கிரஸ் விமர்சனம் செய்தது.

இதனையடுத்து 39 இந்தியர்கள் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். 

சுஷ்மா சுவராஜ் பேசுகையில், “மாநிலங்களவையில் நான் மிகவும் பொறுமையாகவும், சாந்தமாகவும் பேசினேன், அனைவரும் கேட்டார்கள். அனைவரும் இரங்கல் தெரிவித்தார்கள். இது மக்களவையில் நடக்கும் என நினைத்து இருந்தேன். ஆனால் கடந்த சில நாட்களாக அங்கு  அமளியே நடக்கிறது. ஜோதிராதித்ய சிந்தியாஜி தலைமையிலான காங்கிரஸ் போராட்டம் மிகவும் துரதிஷ்டவசமானது. காங்கிரஸ் மிகவும் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு உள்ளது. காங்கிரஸ் இறப்பில் அரசியல் செய்கிறது. சம்பந்தப்பட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் நான் தனிப்பட்ட முறையில் பேசினேன், அவர்களிடம் எந்தஒரு ஆதாரமும் கிடைத்ததா என்று கேட்டேன். ஆதாரம் இல்லாமல் இறந்துவிட்டார்கள் என அரசு கூறமுடியாது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஏன் அரசு பாராளுமன்றத்திற்கு முன்னதாக எங்களிடம் சொல்லவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள்.

 பாராளுமன்றத்தில் முதலில் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இது என்னுடைய பணியாகும். இவ்விவகாரத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக யாரோ ஒருவரது சடலத்தை கொடுப்பது என்பது மிகப்பெரிய பாவமாகும். உடல்களை மரபணு பரிசோதனை நடத்தியதில் 39 உடல்களில் 38 உடல்களின் மரபணு இந்தியர்களின் மரபணுவுடன் ஒத்துச்சென்றது, இன்னும் ஒரு சடலத்தை கண்டுபிடிக்கும் விவகாரத்தில் மட்டும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு எந்தஒரு ஆதாரமும் இல்லாமல் உயிரிழ்ந்துவிட்டனர் என கூற முடியாது. கடந்த 2014 மற்றும் 2017-ல் நாங்கள் இதனை தெளிவாக கூறியிருந்தோம். நாங்கள் எதனையும் மறைக்கவில்லை. நாங்கள் யாருக்கும் பொய்யான நம்பிக்கையை கொடுக்கவில்லை. அரசு விடாமுயற்சியை மேற்கொண்டது. உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்டவர்களில் 27 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள், 6 பேர் பீகாரை சேர்ந்தவர்கள், 4 பேர் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்கள், இருவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள், ஒருவரது அடையாளம் மட்டும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உறுதியான தகவல் கிடைக்கும் போதுதான் நான் என்னுடைய தெளிவான தகவலை தெரிவிக்க முடியும் என கூறியிருந்தேன். என்னுடைய வாக்குறுதியை நான் கடைபிடித்து உள்ளேன். உறவினர்களிடம் சடலத்தை கொடுக்கும் வரையில் என்னுடைய பணியை தொடர்ந்து மேற்கொள்வேன்.

ஹர்ஜித் மாசித் ஒரு தனி நபர், அவர் கூறலாம் 39 இந்தியர்களும் உயிரிழந்துவிட்டனர் என்று. ஆனால் அரசு எளிதான முறையில் உயிரிழந்துவிட்டனர் என கூறிவிட்டு செல்ல முடியாது. இந்தியர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பது தெரியாது, அவர்கள் 6 மாதங்களுக்கு முன்னர் அல்லது 2 வருடங்களுக்கு பின்னர் கொல்லப்பட்டு இருக்கலாம். ஆனால் மொசூல் நகரில் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து விடுபட்ட பின்னரே தேடுதல் நடைபெற்றது. ஹர்ஜித் மாசித் தொந்தரவு செய்யப்பட்டார் என்பது அடிப்படையற்றது. அவரை காவலில் வைத்து இருந்தோம் என்பதும் அடிப்படையற்றது. இதனை பாராளுமன்றத்தில் ஏற்கனவே கூறிவிட்டேன் என்றார். 
 
மாநில அரசுக்களுடன் நாங்கள் பேசிஉள்ளோம், உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார் சுஷ்மா சுவராஜ்.


Next Story